சனி, 26 மார்ச், 2022

நடிகர் S.A.அசோகன் வாழ்க்கை வரலாறு

திருச்சியில் 1931 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி பிறந்தவர், அசோகன். அவரது இயற்பெயர் அந்தோணி. படிக்கும் போதே எழுத்துப் போட்டி, பேச்சு போட்டிக்களில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர். அதே போல மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டினார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ முடித்த போது, இனி நமது தொழில் சினிமாதான் என்று முடிவு செய்தவர், சென்னைக்கு வந்தார். இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அப்போது அவர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த பிரம்மாண்ட படைப்பான ‘அவ்வையார்’ படத்தில் நடிக்க சிபாரிசு செய்ததுடன், அவருடைய பெயரை சினிமாவுக்காக அசோகன் என்று வைத்துக் கொள்ள ஆலோசனை கூறி இருக்கிறார். டி.ஆர்.ராமண்ணாவின் சிபாரிசின் பேரில் கே.பி.சுந்தரம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த அவ்வையார் படத்தில் சோழ மன்னராக சிறிய வேடத்தில் நடித்தார் அசோகன். அந்தப் படம் 1953 ஆம் ஆண்டு வெளியானது.

பின்னர் ஸ்ரீதரின் ‘எதிர்பாராதது’ படத்தில் சிறு வில்லன் வேடம் கிடைத்தது. படம் பெரிய வெற்றி பெற்றாலும் அசோகனுக்கு எந்த அங்கீகாரமும் அதன்மூலம் கிடைக்கவில்லை. அடுத்து அஞ்சலிதேவி முக்கிய வேடத்தில் நடித்த ‘டாக்டர் சாவித்திரி’ படத்தில் கமிஷனாரக நடித்த அசோகன், பானுமதி நடித்த ‘ரம்பையின் காதல்’ படத்தில் மந்திரியாக நடித்தார்.

1959 ஆம் ஆண்டு வரை சிறு சிறு வேடங்களில் பல படங்களில் தலைகாட்டிய அசோகனுக்கு, ‘பெண் குலத்தின் பொன்விளக்கு’ என்கிற படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. மாயஜால படங்களுக்குப் புகழ்பெற்ற விட்டாலாச்சார்யா, இயக்கிய சமூகப்படங்களில் ஒன்றான இப்படத்தின் வெற்றி அசோகனின் வாழ்வில் முக்கியமானது. இப்படத்தின் நாயகனாக நடித்த ஜெமினி கணேசனுடன் மிக நல்ல நட்பை பெற்றார் அசோகன்.

அதே ஆண்டில் வெளிவந்த ‘படிக்காத மேதை’ படத்திலும் கூட நல்ல வேடம் ஒன்று கிடைத்திருந்தது. 1960 இல் வெளிவந்த ‘பார்த்திபன் கனவு’ படத்தில் அரசர் பார்த்திபனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதையின் அடிப்படையில் பார்த்தால் இது மிகவும் சிறிய கதாபாத்திரம்தான். ஆனாலும் கூட படத்தின் தலைப்பில் இருக்கும் பெயரைத் தாங்கி நிற்கும் பாத்திரம் என்பதாலும், கல்கி எழுதிய இந்த நாவல் வெளிவந்த சமயத்திலேயே பலரைக் கவர்ந்திருந்ததாலும் அசோகனின் பெயர் மெல்ல மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தது.

எம்ஜிஆருக்கு நிகராக வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு பின்னர் காணாமல் போன சி.எல்.அனந்தன் நாயகனாக நடித்து பெருவெற்றி பெற்ற ‘விஜயபுரிவீரன்’ திரைப்படத்தில் நஞ்சப்பன் என்ற வில்லன் வேடத்தில் அசோகன் அசத்தியிருந்தார். அசோகனின் பெயர் முதல் நான்கு முதன்மை நடிகர்களில் ஒருவராக அமையப்பெற்றது இந்தப்படத்தில்தான்.

அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் முதல் வரிவிலக்கு பெற்ற படமான ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஆஷ் துரையாக நடித்தார் அசோகன். அசோகனின் முதல் பெரிய ஹிட் படம் என்றால், அது ‘மணப்பந்தல்’. அந்தப் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக, அதுவும் குடிகாரராக அசோகன் நடித்திருந்தார். இந்தப்படம் தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வேடம் என்பதால் அசோகன் மெல்ல மெல்ல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

என்னதான் நல்ல நடிகராக அடையாளம் காணப்பட்டாலும், எம்ஜிஆர் போன்ற பெரிய நாயகர்களுடன் நடிக்கவில்லை என்றால் மக்கள் மனதில் பதிவது கடினம். அந்த அதிர்ஷ்டம் அசோகனுக்கு ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படம் மூலம் நிறைவேறியது. முதன்முதலாக எம்ஜிஆருக்கு அண்ணனாக, அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். எம்.ஆர்.ராதாவும் படத்தில் இன்னொரு வில்லனாக நடித்திருந்தார்.

இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தைத் தயாரித்த தேவர் பிலிம்ஸ், மீண்டும் இதே நடிகர்களை வைத்து ‘குடும்பத் தலைவன்’ படத்தை அடுத்த ஆண்டே வெளியிட்டது. இதிலும் அசோகன் எம்ஜிஆருக்கு அண்ணனாக நடித்திருந்தார். இந்தப் படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அசோகனின் முகம் மக்களின் மனதில் ஆழப்பதியத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து இதே கூட்டணி ‘தாயைக் காத்த தனயன்’ படத்திலும் மூன்றாவது முறையாக இணைந்தது. இதுவும் பெரிய வெற்றியை பெற்றது. இவ்வாறாக எம்ஜிஆர், தேவர் பிலிம்ஸ், எம்.ஆர்.ராதா, சரோஜா தேவி, அசோகன் கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக மக்களால் பார்க்கப்பட்டது. ‘தர்மம் தலைகாக்கும்’ படத்தின் வெற்றி அதை உறுதியும் செய்தது.

‘காஞ்சித்தலைவன்’ படத்தில் சாளுக்கிய அரசன் புலிகேசியாகவும், ‘கொடுத்து வைத்தவள்’ படத்தில் மாணிக்கமாகவும், ‘பணத்தோட்டம்’ படத்தில் நடராஜனாகவும், ‘பெரிய இடத்துப்பெண்’ படத்தில் சபாபதியாகவும், ‘தெய்வத்தாய்’ படத்தில் கருணாகரனாகவும், ‘பணக்கார குடும்பம்’ படத்தில் முத்தையாவாகவும் இப்படி வரிசையாக பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார், அசோகன்.

நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப்பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து அழகு பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். எந்த நேரமும் அசோக் வருவார். சாப்பாடு எடுத்து வையுங்கள் என்று சொல்வாராம். எம்.ஜி.ஆர்.,

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரை ஏவி.எம். நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தியது போல எம்.ஜி.ஆரையும் ஏவி.எம்.நிருவனத்துக்கு அழைத்து சென்று ஏ.சி.திருலோகசந்தருடன் இணைய வைத்து ‘அன்பே வா’ என்கிற படத்தை உருவாக்க காரணமாக இருந்தவரும் அசோகன் தான். அந்தப் படத்தில் அவருக்கு செண்டிமெண்ட் கலந்த காதல் வேடம். உள்ளத்தை தொடும் நடிப்பை அந்தப் படத்தில் கொடுத்திருப்பார், அசோகன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பல வெற்றிப் படங்களை தயாரித்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, கே.சங்கர் இயக்கத்தில் “இது சத்தியம்” என்கிற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் கதாநாயகனாக அசோகன் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக  சந்திரகாந்தா நடித்தார்.

1963 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அசோகன் நடித்தார். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்து 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படத்திலும் சந்திரகாந்தாதான் கதாநாயகி.

1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த “காட்டு ராணி”. இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். எம்.ஏ.திருமுகம் இயக்கினார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன் ஜோடியாக வசந்தா நடித்திருந்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” தான் அசோகன் ஹீரோவாக நடித்த கடைசி படம். இதில் அவர் ஜோடியாக மணிமாலா நடித்திருந்தார். இந்தப்படம் வெற்றி பெற்ற படம். ஆனாலும் என்னவோ தெரியவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு அசோகன், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் தான் நடித்தார்.

‘வல்லவனுக்கு வல்லவ’னில் சிக்கித் தவிக்கும் ஆதரவற்ற பயணியாக அசோகனின் நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில்  “ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்” என்ற பாடலுக்கு மிகவும் அமைதியாக நடித்து இருப்பார்.

இதே படத்தில் நடிகர் மனோகருடன் சேர்ந்து “பைத்தியமே கொஞ்சம் நில்லு” என்ற பாட்டிற்கு இருவருமே செய்யும் சேஷ்டைகள் நகைச்சுவையாக இருக்கும். ஒரு பணக்கார குடும்பத்தில், நெஞ்சுவலி கொண்ட அண்ணன் பாத்திர படைப்பில் ‘அதே கண்கள்’  படத்தில் அமைதியாக நடித்து இருப்பார்.

துரியோதனன் என்றாலே கெட்டவன் என்கிற எண்ணம் விதைக்கப்பட்ட மனதில், கர்ணன் படத்தில் "எடுக்கவோ, கோக்கவோ” என்ற வசனம் என்ன மாதிரியான நல்லெண்ணங்களை உருவாக்கும் என்பதை நாம் உணர்தல் அவசியம். அதை சிவாஜிக்கு முன் நின்று அசோகன் நிகழ்த்திக் காட்டினார். சிவாஜியுடனான பல படங்களில் அசோகன் மிக நல்நடிப்பை வழங்கியிருகிறார்.

உயர்ந்த மனிதன் படத்தில் சிவகுமார்தான் சிவாஜியின் புதல்வர் என்கிற விஷயத்தை சொல்லும் காட்சி படத்தின் மிகமுக்கிய திருப்புமுனைக்காட்சி. அசோகனுக்கு மிக சிறிய வேடம்தான். ஆனால் மனநிறைவைத்தரும் வேடம்.

அதே கண்கள் போன்ற படங்களில் அசோகனின் கதாபாத்திரம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. காரணம் படத்தின் முக்கிய வில்லன் அவரில்லை. ஆனால் முந்தைய படங்களில் அசோகன் வில்லனாக நடித்திருந்ததால் அவர் மீது இயல்பாகவே ஒரு சந்தேகம் தோன்றும். அந்தவகையில் பார்க்கையில் அசோகன் மக்கள் மனதில் ஒரு வில்லன் நடிகராக தெளிவாகப் பதிந்து விட்டார் என்பதை நாம் உணரலாம்.

ஏ.சி.திருலோகசந்தர் திரைக்கதையில் ஜோசப் தளியத் இயக்கத்தில் விஜயபுரி வீரன் படத்தில் இரண்டாவது நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் ஏ.சி.திருலோசந்தரும் அசோகனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி இருக்கிறார். அந்தப் படத்தில் ஜெய்சங்கர் முக்கிய வேடத்தில் நடித்தார்.

அசோகன், ஜெய்சங்கர் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் பிரபலமான கலைஞர்களின் குழுவுடன், அடிக்கடி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்கள்.

அசோகனின் வில்லன் நடிப்புக்கென்று தனி இடம் உண்டு. குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அசோகன் குரலின் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் அவருக்கு பெண் ரசிகலைகள் நிறையவே இருந்தார்கள்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் மொட்டைத் தலையுடன், ஒற்றைக் கண்ணுக்கு மட்டும் திரை போட்ட வில்லனாக வருவார். ‘கந்தன் கருணை’ படத்தில் சூர பத்மனாக வரும்போது அவருடைய தோற்றம், நடை, உடை, தொனி எல்லாம் நேரடியாகவே ஒரு சூர பத்மனைப் பார்ப்பது போலிருக்கும்.

கால்களில் ஆறுவிரல்கள் உள்ள, வில்லியுடன் சேர்ந்து கொண்டு ‘அடிமைப் பெண்’ படத்தில் செய்யும் செங்கோடன் என்ற வில்லன் வேடத்தை இனி யாராலும் செய்ய முடியாது. அந்த படத்தில் சத்தமிட்டு, தனது சபதத்தை நினைவுபடுத்தி, சூட்டுக் கோலால் தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்ளும் காட்சியை மறக்க முடியுமா என்ன?

கேமரா கர்ணன், பலவித கோணங்களில் சண்டை காட்சிகளை படமாக்கிய ‘எங்க பாட்டன் சொத்து’ படத்தில் ஆங்கிலப் படங்களில் வரும் கௌபாய் பட ஸ்டைலில் வில்லன் வேடம் அசோகனுக்கு. அசத்தி இருந்தார்.  

ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, அசோகன், சந்திரபாபு என்று நட்சத்திரப் பட்டாளம் நடித்த படம் ‘பாதகாணிக்கை’. இதில் மாமனார் எம்.ஆர்.ராதா பேச்சைக் கேட்டுக் கொண்டு, சொத்துக்காக, தனது அப்பா எஸ்.வி.சுப்பையாவை கோர்ட்டுக்காக இழுக்கும் மகன் வேடத்தில் அசோகன் நடித்து இருந்தார். குடும்பக் கதை. இதில் அசோகன் தனது முழுத் திறமையையும் காட்டி நடித்து இருந்தார். இதில் “ஆடிய ஆட்டம் என்ன?” என்று தொடங்கும் பாடலை யாராலும் மறக்க முடியாது

வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு, ஒரு காலை இழந்த மகனாக, ஊன்றுகோலுடன் அசோகன் பாடும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும். கண்கள் குளமாகும்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.

அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடியாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்.,

ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். சரஸ்வதிக்கு மேரிஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

நண்பர் ஜெய்சங்கர் வெளியூர் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவந்து அசோகன் – மேரிஞானம் தம்பதிக்குத் தனது வீட்டில் சிறப்பான விருந்துவைத்து மகிழ்ந்தார். இவர்களுக்கு அமல்ராஜ், வின்சென்ட் என்று இரண்டு மகன்கள்.

அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் தயாரிப்பில் இருந்த போது தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அரசியல் சூழ்நிலை காரணங்களால் அந்தப் படத்தின் தயாரிப்பு தாமதமானது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஒரு கட்டத்துக்கு மேல் பைனான்சியர் ஃபைனான்ஸ் செய்ய முன்வராததால் படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளபாக்கி உருவானது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் அவரை வரச்சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி உள்ளது என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர், அவருக்குத் தந்து பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார். பணம் கிடைத்த அன்று இரவே ஒவ்வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்து படத்தை வெளியிட்டார், அசோகன்.

1982-ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் அசோகனுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3 மாதம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு 9.35 மணி அளவில் தனது 51வது வயதில் மறைந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்தவ முறைப்படி அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சில ஆண்டுகளக்கு பிறகு அவரது மனைவி மேரிஞானம், அதன் பிறகு அவரது மூத்த மகன் அமல்ராஜும் காலமானார்கள். இரண்டாவது மகன் வின்சென்ட் அசோகன், சரத்குமார் நடித்த ‘ஏய்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தொட்டி ஜெயா, சாணக்கியா, போக்கிரி, ஆழ்வார், வேலாயுதம், வித்தகன் என ஐம்ன்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை மற்றும் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார்.

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக