செவ்வாய், 15 மார்ச், 2022

நடிகை அம்பிகா வாழ்க்கை வரலாறு

கேரள மாநிலம், திருவனந்தபுரம், கிளிமானூர் அருகிலுள்ள கல்லற என்னுமிடத்தில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி குஞ்சன் நாயர், சரசம்மா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர், அம்பிகா. இவருக்கு ராதா, மல்லிகா என்கிற இரு சகோதரிகளும், அர்ஜுன், சுரேஷ் என இரு சகோதர்களும் உள்ளனர்.

சிறுவயது முதல் நடிப்பு நடனம் என்றால் அம்பிகாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும்போது படிப்பில் நாட்டமில்லாமல் நடனத்தில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அடிக்கடி சினிமாவுக்கு போக அம்மாவை வற்புறுத்தி இருக்கிறார்.

ஊரில் சோட்டனிக்கர அம்மா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு அங்கு வேடிக்கைப் பார்க்க செல்ல வேண்டும் என்று அழுது அடம் பிடித்து அம்மாவை அழைத்து போக வைத்த அம்பிகா, அங்கு படத்தில் சிறு வாய்ப்பு கிடைத்ததும், அதில் நடிக்கவும் தயங்கவில்லை. அன்று காய்ச்சல் இருந்திருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு வெளியான சோட்டனிக்கர அம்மா என்கிற அந்தப் படமே அம்பிகா சிறுமியாக நடித்த முதல் படம். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தாரா,  உனக்கு நல்ல முகம் இருக்கு. எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவாய் என வாழ்த்தி இருக்கிறார். அடுத்த ஆண்டில் மூன்று படங்களில் சிறுமியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படங்களிலும் நடித்தார், அம்பிகா.

பள்ளி விழாக்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக வருவார்கள். அப்படி ஒருமுறை வந்திருந்த நடிகர் மதுவிடம் பரிசு பெற்ற அம்பிகா, அவரிடம் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு இரண்டு, மூன்று முறை அவரிடம் அம்பிகா தெரிவித்திருக்கிறார்.

இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்ட நடிகர் மது, சரி வா என்று கூறி, அவர் நடித்து இயக்கிய  ‘தீரசமீரே யமுனா தீரே’ என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அடுத்து அவர் தயாரித்து நடித்த ‘அஸ்தமயம்’ படத்திலும் அவருக்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்து உற்சாகப்படுத்தி இருக்கிறார். மதுவுடன் படங்களில் நடிக்கின்ற போது இனி நம் எதிர்காலம் சினிமா என்று முடிவு செய்திருக்கிறார், அம்பிகா.

அவர் நினைத்தது போல தொடர்ந்து சிறிய சிறிய வாய்ப்புகள் கிடைத்தது. பனிரெண்டு வயதில் நடிக்க தொடங்கியவர் பதினான்கு வயதை நெருங்கிய போது ‘சீதா’ படத்தில் கதாநாயகி ஆனார். பி.கோவிந்தன் இயக்கிய இந்தப் படத்தில் சுகுமாரி, திக்குறிச்சி சுகுமாரன் நாயர், நாகவள்ளி ஆர்.எஸ்.குருப், ஆகியோருடன் அம்பிகா நடித்தார். எம்.கே. அர்ஜுனன் இசையமைத்த அந்தப் படம் தமாதமாகத்தான் வெள்ளியானது.

கதாநாயகியாக கமிட்டான பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘நீலத்தாமரை’, ‘சமயமாயில்லா போலும்’ ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்து புகழ் சேர்த்தன. இதனால், தொடர்ந்து கதாநாயகியாக நிறைய மலையாளப் படங்களில் நடித்தார்.

சிறுவயதில் மலையாள படங்களில் உச்ச நட்சத்திரமாக இருந்த பிரேம்நசீரின் படங்களைப் பார்த்துவிட்டு அவருடைய படங்களில் நடித்து டூயட் பாடுவது போன்று நினைப்பாராம், அம்பிகா. அவருடைய படங்கள் மீது அப்படி ஒரு மயக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், காலம் அவருடன் டூயட் பாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நவோதயா அப்பச்சன் இயக்கத்தில் பிரேம் நசீர் நடித்த மாமாங்கம் என்கிற படத்தில் அந்த ஆசையும் அவருக்கு நிறைவேறியிருக்கிறது.

பிற்காலத்தில் அவருடன் மட்டுமல்லாது, அவருடைய மகன் ஷாநவாஸ் கூடவும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார் அம்பிகா.

மலையாளத்திலும் பல படங்களில் நடிப்பதை பார்த்து மற்ற மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழில் ஒரே நேரத்தில் சக்களத்தி, தரையில் வாழும் மீன்கள், கடல் மீன்கள் என்று மூன்று படங்கள் ஒப்பந்தமாகின. அதில் கமலுடன் நடித்த கடல் மீன்கள் படம் மட்டுமே வெளினாது. அந்தப் படத்தைப் பார்த்து கே.பாக்யராஜ், தனது ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த ஏழு நாட்கள் படம் வெளியாகி பெரிய வெற்றி படமாக அமைந்து அம்பிகாவுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவருடைய வசந்தி என்கிற வலிமையான அந்த கேரக்டரும், படத்தின் வெற்றியும் அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போது கன்னடத்திலிருந்து அழைப்பு வர, ஸ்ரீநாத்துடன் கருடரேகை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் கன்னடத்தில் வெற்றிப் படமாக அமைய கன்னடத்திலும் பிஸியான நடிகையானார், அம்பிகா. மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான அம்பிகா, மூன்று மொழிகளிலும், முன்னணி நடிகர்கள் எல்லோருடைய படங்களிலும் நடிக்க கால்ஷீட் கொடுத்து நடித்தார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட், நான்கு கால்ஷீட் என்று தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

அம்பிகா கிளாமராக நடித்த ‘சகலகலா வல்லவன்’ படமும், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்த ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதனால், குடும்பபாங்கான வேடம், கிளாமர் வேடம் எந்த வேடமாக இருந்தாலும் நடித்தார், அம்பிகா. தொடர்ந்து மூன்று மொழிகளும் பல வெற்றி படங்கள் வரிசையா வந்து கொண்டே இருந்தது.

ரஜினிகாந்த், கமலஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். கருடா சவுக்கியமா படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர், பிறகு ‘வாழ்க்கை’ படத்தில் அவருக்கு ஜோடியாக வயதான வேடத்தில் நடித்தார். இருபது வயது கூட ஆகாத நிலையில் சிவாஜிக்கு ஜோடியாக 55 வயது வேடத்தில் நடித்தார், அம்பிகா. தொடர்ந்து அம்மா வேடங்கள் வந்து விடுமோ என்று பயந்து தான் அந்த படத்தில் நடித்தார். ஆனாலும், சிவாஜி சாருடன் நடிக்கின்ற ஆர்வத்திலும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார்.

தொடர்ந்து படம் ஹிட்டானதால், தொடர்ந்து கதாநாயகி வாய்ப்பு வருவதும் குறையவில்லை. பிறகு சிவாஜியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் அம்பிகாவுக்கு எம்.ஜி.ஆருடன் கோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற எண்ணம் இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ரசிகையான அவருக்கு அவருடன் நடிக்க ஆசை இருக்காதா என்ன? ஒரு முறை, விமானத்தில் செல்லும் போது, அந்த விமானத்தில் எம்.ஜி.ஆர். இருப்பதை கண்ட அம்பிகா, பாதுகாவலர் கெடுபிடிகளையும் மீறி எம்.ஜி.ஆரை பார்க்க பக்கத்தில் சென்றிருக்கிறார்.

உங்க கூட நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. நீங்க ஏன் சார் சினிமாவை விட்டு போனீங்க என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்.

அம்பிகாவின் ஆசையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவரை தட்டிக் கொடுத்து, “சரியான நேரத்துக்கு சூட்டிங் போய் விடனும், பெரிய நடிகையாக இருக்கணும்” என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

எம்ஜிஆர் சொன்னது போலவே ஒவ்வொரு படத்தின் படிப்புக்கும் சரியான நேரத்திற்கு சென்று விடுவார் அம்பிகா. அதனாலேயே இயக்குனர்களிடம் பொறுப்பான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கிறார்.

ரஜினியுடன் எங்கேயோ கேட்ட குரல், நான் சிகப்பு மனிதன், படிக்காதவன், மிஸ்டர் பாரத், மாவீரன், அன்புள்ள ரஜினிகாந்த், ஸ்ரீராகவேந்திரர், கமலஹாசனுடன் சகலகலா வல்லவன், காக்கி சட்டை, காதல் பரிசு, விக்ரம், நானும் ஒரு தொழிலாளி என பல படங்களில் நடித்துள்ள அம்பிகா, சிவக்குமார், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, ராஜ்குமார், ஸ்ரீநாத், அம்பரீஷ், விஷ்ணுவர்தன், மது, மமூட்டி, மோகன்லால், என்று அப்போதய தென்னிந்திய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நடித்த எங்கேயோ கேட்ட குரல், கமலுடன் காதல் பரிசு ஆகிய படங்களில் அவரது தங்கை ராதாவுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சிவாஜியுடன் நடித்த வாழ்க்கை பட சூட்டிங் நேரத்தில் இரண்டு இந்திப் படங்களில் நடிக்க அழைத்திருக்கிறார், அமிதாப்பச்சன். தமிழ் படங்களில் பிசியாக இருந்ததால் இந்திப் பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார், அம்பிகா.

ராஜாதிராஜா, மெல்லத்திறந்தது கதவு, சிறை உட்பட அம்பிகா நடிக்க முடியாமல் போன படங்களின் லிஸ்ட் கொஞ்சம் பெரியது. கால்ஷீட் உள்ளிட்ட பல காரணங்களால் நிறைய வெற்றி பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார். அதற்காக கிடைக்காத வாய்ப்புகளுக்காக ஒருபோதும் மன வருத்தப்பட்டதே இல்லையாம்.

ஆரம்பகால சினிமாவில் பல அவமானங்களை கடந்து தான் வந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அம்பிகா, வாய்ப்பு வந்த போது தூக்கம், சாப்பாடு போன்ற இழப்புகளை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இதுவரைக்கும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அம்பிகா அதில் 200 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிக்க வந்ததால் படிப்பு நின்றுவிடுமோ என்று முதலில் அஞ்சிய அவர், நடிப்புக்கு நடுவே படிப்பு என்று அஞ்சல் வழி கல்வியில் படித்து டிகிரி முடித்திருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு  பிரபுவுடன் இவர்கள் வருங்கால தூண்கள் படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். 1988-இல் பிரேம்குமார் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகாவுக்கு 1989 ஆம் ஆண்டு ராம் கேசவ், 1991 ஆம் ஆண்டு ரிஷி கேசவ் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

எல்லோரையும் போல உண்மையான அன்பான வாழ்க்கைதான் அம்பிகாவின் வாழ்க்கையிலும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யாக அமையவே 1996 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கிக் கொண்டார்.  

ரஜினி நடித்த தர்மதுரை படத்தில் ஜோடியாக நடிக்க அழைத்த போது திருமணத்தை காரணம் சொல்லி அமெரிக்காவுக்கு சென்றவர், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு அம்மாவாக சுந்தர்சி இயக்கிய அருணாசலம் படத்தில் நடிக்க வந்தார்.

அதன் பிறகு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ரோஜாவின் அம்மா, அமர்க்களம் படத்தில் ஷாலினியின் அம்மா, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ஷாலினியின் அம்மா, வல்லரசு படத்தில் தேவயானியின் அம்மா, அல்லிஅர்ஜுனா படத்தில் ரிச்சாவின் அம்மா, மழை படத்தில் சதாவின் அம்மா, ஒற்றன் படத்தில் சிம்ரனின் அம்மா, ஜிகிர்தண்டா படத்தில் லட்சுமி மேனனின் அம்மா, இது என்ன மாயம் படத்தில் விக்ரம்பிரபுவின் அம்மா, அவன் இவன் படத்தில் விஷாலின் அம்மா என நாயகன், நாயகிகளின் அம்மா வேடங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். நிழல் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுவரை தமிழில் 120, மலையாளத்தில் 140, கன்னடத்தில் 40, தெலுங்கு மொழியில் 20 என 320 படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா,  சின்னைத்திரையில் 17 தொடர்களில் நடித்தவர், 20 நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

சின்னத்திரையில் நடிக்கும் போது சின்னத்திரையில் அவருடன் நடித்த ரவிகாந்த் என்பவரை 2000 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அம்பிகா, அவரிடம் இருந்தும் 2002 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள அம்பிகா, நிழல் என்கிற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் ஏ.ஆர்.எஸ்.கார்டன் என்கிற சினிமா ஸ்டுடியோவை பல ஆண்டுகள் நடத்திய அம்பிகா, தனது மகன் ராம்கேசவை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் கொடியேற்றிய நடிகைகள் பலர் உண்டு. அதில் அம்பிகா-ராதாவுக்கு தனி இடம் உண்டு.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக