செவ்வாய், 15 மார்ச், 2022

நடிகர் மோகன் வாழ்க்கை வரலாறு

வெள்ளிவிழா நாயகன் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் நடிகர் மோகன். கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் 1956 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி பிறந்த மோகன், படித்து முடித்ததும் பி.வி.காரந்த் என்பவரால் நாடக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

உணவகத்தில் சாப்பிட போனவருக்கு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பு மூலம் தனது திறமையை வெளிப்படுத்த பல இடங்களில் நிறைய பாராட்டுகளும், ஊக்கப்படுத்தும் விமர்சனங்களும் கிடைக்க பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

மலையாளத்தில் இருபது படம், தெலுங்கு மொழியில் மூன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா, கன்னடத்தில் ஷோபா நாயகியாக நடிக்கும் கோகிலா என்கிற படத்தை கதை எழுதி இயக்கினார். அந்தப் படத்தில் கமலஹாசனுக்கு நண்பனாக நடிக்க பலரை அழைத்துப் பார்த்த பாலு மகேந்திரா, பெங்களூர் வங்கி ஒன்றில் மோகனைப் பார்த்து இவர்தான் அந்த நண்பன் என்று முடிவு செய்தார்.

1977 ஆம் ஆண்டு வெளியான கோகிலா படம் கன்னடத்தில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தத்துடன், சென்னையிலும் நூறுநாள் ஓடிய முதல் கன்னடப் படம் என்கிற பெயரையும் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஊமக்குயில் என்ற பெயரிலும், இந்தியில் அவுர் ஏக் பிரேம் கஹானி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது, சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில விருதை பாலு மகேந்திரா பெற்றார்.

இந்தப் படத்தின் வெற்றியால் படத்தில் நடித்த அனைவரும் பெரிய புகழ் பெற்றனர். இந்தப் படத்திற்கு பிறகு கன்னடத்தில் அபரிச்சிதா, மலையாளத்தில் மடாலசா, தெலுங்கு மொழியில் தூர்ப்பு வெல்லே ரைலு ஆகிய படங்களில் நடித்த மோகனை, கோகிலாவில் கமலின் தோழனாக நடிக்க வைத்த பாலு மகேந்திரா, மூடுபனி படத்தில் பனி விலகிய ஒரு எபிஸோடில் மிகச்சிறிய வேடத்தில் வந்து போக வைத்தார். நாலைந்து க்ளோஸ் அப் மற்றும் அர்த்தமற்ற சில டயலாகுகள். அவர் தோன்றும் காட்சிகளில் ஒரு ஸ்கூட்டருக்குக் கிடைத்ததற்கு அடுத்த மரியாதை தான் அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், மனசுக்குள் நின்றார்.

அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படம் வெளியாகி அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அந்தப் படம் ஒரு வருடம் ஓடி, தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட மூன்று விருதுகளை வென்றது. தமிழில் துரை இயக்கிய கிளிஞ்சல்கள் படத்தில் நடித்தவர், அப்டியே கன்னடத்திற்கு சென்று மூன்று படங்களை முடித்தவர், மீண்டும் தமிழுக்கு வந்து கோவைதம்பியின் தயாரிப்பில் பயணங்கள் முடிவதில்லை என்கிற படத்தில் நடித்தார். ஆர்.சுந்தராஜன் இயக்குனராக அறிமுகமான அந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இன்று வரை எத்தனையோ பேர், எத்தனையோ விதமான பாடகர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் போல், மோகனுக்கு மைக்கும் பாட்டும் அப்படி பாந்தமாகப் பொருந்திப் போனது. முன்னதாகவே வெற்றியின் ருசி அறிந்த மோகன், இந்த முறை ஆர்.சுந்தர்ராஜனுக்கும் வழங்கினார். அவரின் முதல் வெற்றி. கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துக்கும் கிடைத்த முதல் வெற்றி. படம் வெளியாகி வெள்ளிவிழா படமாக அமைந்தது.

மோகன் சென்னையில் தங்கி வாய்ப்பு தேடி அலையும் பொழுது, ஸ்டில்ஸ் ரவி மோகனை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து அவருக்காக வாய்ப்பு தேடினார். ஸ்டில்ஸ் ரவியும், மனோபாலாவும் நண்பர்கள்.. இருவருடனும் மிகவும் நட்பாக இருந்தார்..

கார்த்திக், சுஹாசினி நடித்த ‘ஆகாய கங்கை’ படத்தை இயக்கி அந்தப் படத்துக்குப் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்தார் இயக்குநர் மனோபாலா. நண்பன் மனோபாலா வாய்ப்பு இல்லாமல் இருப்பதை அறிந்த மோகன், தயாரிப்பாளர்களிடம் மனோபாலாவிற்கு இயக்குனர் வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால் உடனே கால்ஷீட் தருகிறேன் என்றார்.. அப்போது மோகன் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.. மனோபாலாவிற்காக இரவு நேரங்களில் தனது கால்ஷீட் கொடுத்தார்.. முதலில் பத்து நாட்கள் பிறகு ஏழு நாட்கள் பிறகு மூன்று நாட்கள் என்று தன் நண்பன் ஜெயிக்க வேண்டும் என்று நடித்துக் கொடுத்தார் மோகன்.. அந்தப் படம் தான் பிள்ளை நிலா..  ராதிகா, ஜெய்சங்கர், பேபி ஷாலினி நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது அந்தப் படம்..

இயக்குநர் மணிவண்ணனின் முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ அதிரிபுதிரி ஹிட்டாகியது. கே.ரங்கராஜின் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ நாயகனும் இவர்தான். ‘உதயகீதம்’ படத்தில் மைக் பிடித்தாலும் ‘நூறாவது நாள்’ படத்தில் கத்தியும் துப்பாக்கியும் பிடித்தார். வில்லனிக் ஹீரோவாகவும் மோகன் ரசிக்கவைத்தார். மோகனை ரசித்தார்கள். பாட்டுக்குப் பெயர் போன ‘நான் பாடும் பாடல்’ படத்தில், பாடகி அம்பிகாவின் காதலன் ப்ளஸ் கணவன் மோகன். மருத்துவராக நடித்தார்.

தொழிலதிபராக நடித்தாலும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வேலை தேடி அலையும் ‘குங்குமச்சிமிழ்’ மவுத் ஆர்கன் நாயகனையும் ஏற்றுக்கொண்டார்கள். ரேவதியால் குத்துப்படுவதையும் ரசித்தார்கள். ரேவதியைக் கொல்ல முனையும் ‘டிசம்பர் பூக்கள்’ படத்தையும் ஓடவைத்தார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யையும் ரசித்தார்கள். ரெண்டுபொண்டாட்டி ‘ரெட்டைவால் குருவி’ நாயகனையும் சிரித்து ஏற்றார்கள். மனைவி கேட்கும் விவாகரத்தை வழங்கும் ‘மெளனராகம்’ கணவனையும் மதித்துப் போற்றினார்கள்.

77-ம் ஆண்டு தொடங்கிய திரைப் பயணத்தில், 84-ம் ஆண்டு மோகனுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.

84-ம் ஆண்டில் மட்டும், மோகன் நடித்த படங்கள் 15-க்கும் மேலே வெளிவந்தன. வருடத்துக்கு 12 மாதங்கள். மாதம் ஒன்று என்று வந்தால், 12 படங்கள்தானே வந்திருக்கவேண்டும். ஆனால் 15 மோகன் படங்கள் வெளியாகின.

ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜி தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், மோகன் நடித்து ‘விதி’ வெளியானது. மோகன், பூர்ணிமா, ஜெய்சங்கர், சுஜாதா நடித்த ‘விதி’ வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் முதலாக, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் சாதாரணமானதல்ல. காதல் காட்சிகளாகட்டும், கோர்ட் காட்சிகளாகட்டும் மோகன் தன் நடிப்பால், இன்னும் மெருகூட்டியிருப்பார். மோகன் படங்களில் மறக்க முடியாத படங்களின் வரிசையில் ‘விதி’ படமும் ஒன்று.

அடுத்து, பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியானது ‘நூறாவது நாள்’. இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், மோகன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஏற்படுத்திய பரபரப்பும் பதட்டமும் இன்றைய தலைமுறையினருக்கும் மறக்காது.

ஜெயப்பிரகாஷ் செய்த கொலையும் அதன் பின்னர் அவர் விடுத்த ஸ்டேட்மெண்ட்டும் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டுடன் ஓடிக்கொண்டிருந்த படத்தை இன்னும் இன்னுமாக ஓடச் செய்தன. மோகன், நளினி, விஜயகாந்த், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். பாடல்களும் ஹிட்டாகி, படமும் ஹிட்டாகி, முக்கியமான படமாக இன்றைக்கும் இருக்கிறது ‘நூறாவது நாள்’. கெட்ட ஹீரோவாக பின்னிப்பெடலெடுத்திருப்பார் மோகன்.

இதன் பின்னர், ஏப்ரல் மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. மீண்டும் கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், ‘நிரபராதி’ எனும் திரைப்படம், ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. மோகனுடன் மாதவி நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களால் பேசப்பட்டது.

அடுத்து, இந்தப் படம் வெளியான நான்காம் நாள், அதாவது ஏப்ரல் 14-ம் தேதி, கோவைத்தம்பியின் ‘நான் பாடும் பாடல்’ வெளியானது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். மோகன் நடித்த இந்தப் படத்தில் சிவகுமார், அம்பிகா, பாண்டியன், இளவரசி முதலானோர் நடித்தனர். இந்தப் படத்தின் பாடல்கள் சக்கைப்போடு போட்டன. மோகனின் கச்சிதமான நடிப்பு, எல்லோரையும் ஈர்த்தது.

மே 4-ம் தேதி ‘நெஞ்சத்தை அள்ளித் தா’ படம் வெளியானது. மோகனுடன் சாதனா நடித்தார். அதே மே மாதத்தில், 12-ம் தேதி, மோகன், ஊர்வசி நடித்த ‘அன்பே ஓடி வா’ வெளியானது. ரஞ்சித்குமார் எனும் இயக்குநர் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் நடிகர், இயக்குநர் நடிகர், கதைகளின் நடிகர் என்பது போல், நடிகைகளின் நடிகர் என்றும் மோகன் பேசப்பட்டார். மோகனுடன் யார் நடித்தாலும் அது சூப்பர் ஜோடி என்று பேரெடுத்தது. மோகன் - ஊர்வசி ஜோடியும் அப்படி ஹிட்டடித்த ஜோடி.

ஜூலை மாதம் 19-ம் தேதி இதே மோகன் - ஊர்வசி நடித்த ‘சாந்தி முகூர்த்தம்’ வெளியானது. இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசை. பாடல்கள் எல்லாமே ஹிட். படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். கலகலவெனச் செல்லும் இந்தப் படத்தை எப்போதும் பார்க்கலாம்.

ஜூலை மாதம் 27-ம் தேதி மோகன் நடித்த ‘மகுடி’ வெளியானது. நளினி ஜோடியாக நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. இந்தப் படத்தில், மோகனின் தனித்துவமான நடிப்பைக் காணலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி, மோகன் நடித்த ‘ருசி’ வெளியானது. கங்கை அமரன் இசையில் பாடல்கள் அமைந்தன.

அந்த வருடத்தில், மோகன் - ஊர்வசி ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ‘வாய்ப்பந்தல்’ வெளியானது. ராம.நாராயணன் இயக்கினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார். படம் காமெடிப்படமாக கலகலவென இருந்ததை, ரொம்பவே ரசித்தார்கள் ரசிகர்கள்.

அக்டோபர் மாதம் 22-ம் தேதி, இயக்குநர் ஏ.ஜெகநாதன் இயக்கத்தில், மோகன், ஊர்வசி நடித்த ‘ஓ மானே மானே’ படம் வெளியானது. இளையராஜா இசை. மறுநாள் 23-ம் தேதி, கே.விஜயன் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில், ‘ஓசை’ வெளியானது. இதில் நளினி, மோகனுடன் நடித்திருந்தார். இந்தப்படத்திலும் மோகன், மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

இதே அக்டோபர் 23-ம் தேதி, இன்னொரு படமும் வெளியானது. கோவைத்தம்பியின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்தில், சிவகுமார், சுஜாதா, மோகன், ரேவதி முதலானோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில், எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஆக, ‘ஓ மானே மானே’, ‘ஓசை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’ என மூன்று படங்கள் வெளியாகி, மூன்றுமே வெற்றியைப் பெற்றன.

மைக்' மோகன் என்று இவருக்கு பெயர் வர காரணம், இவர் நடித்த படங்களில் மைக் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளில் பாடுவார். பெரும்பாலும் பாடகராகத்தான் நடித்தார். அது ஒரு சென்டிமெண்ட்டாகக் கூட கருதப்பட்டது. இவர் நடித்த முக்கால்வாசிப் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.

இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர். இவர் தேர்ந்தெடுக்கும் கதையெல்லாம் காதல் மற்றும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். 1986ஆம் ஆண்டு ஒன்பது படங்களில் மோகன் நடித்தார். அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'மௌன ராகம்'. இன்னொன்று, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான 'மெல்லத்திறந்தது கதவு' திரைப்படம். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்துக்கு இளையராஜா, எம்.எஸ்.வி என்று இரு இசை ஜாம்பவான்களும் இசையமைத்தனர்.

தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு மோகன் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென்றும், ஆண்கள், மோகன் போன்ற தோற்றத்தையும் அவரது உடை பாணியையும் பின்பற்ற முயன்று வந்தனர். தனது படங்களிலெல்லாம் பாடகராகவே தோன்றிய மோகனுக்கு, படங்களில் வெளிப்பட்ட குரல் அவரது குரல் இல்லை. இவருக்கு அனைத்து படங்களுக்கும் நடிகர் விஜயின் மாமாவும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தர் குரல்கொடுத்துள்ளார், பெரும்பாலான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வந்தன.

மோகன், 'பாசப்பறவைகள்' படத்தில் தனது குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் என்று ஐவர் உள்ளனர். ரஜினிகாந்த், மோகன், முரளி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன். இதில் ரஜினிக்கு பிறகு மோகனுக்குதான் அடுத்த இடமளிக்கலாம். அந்த அளவிற்கு வெற்றியை 80களில் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை. சரியான படங்கள் அமையவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு 'அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை.

இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மோகன். அவர் திரையில் வரவில்லை என்றாலும் அவரின் 'நிலாவே வா', 'வா வெண்ணிலா', 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்கள் இன்றளவும் இரவில் பலருக்கு தாலாட்டாக உள்ளது.

‘இவரை வைத்துப் படமெடுத்தால், முதலுக்கு மோசமில்லை’ என்று எம்ஜிஆர் படங்களைச் சொல்லுவார்கள். அதேபோல் ரஜினியைச் சொல்லுவார்கள். விஜயகாந்தை வைத்துப் படமெடுத்து நஷ்டம் அடைந்தவர்கள் என எவருமில்லை. இதேபோல், மோகனையும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கொண்டாடினார்கள். தியேட்டர்களுக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் வந்தார்கள். குடும்பம் குடும்பமாக மோகன் படங்களுக்கு வந்தார்கள்.

‘மோகன் ராசியான நடிகர் மட்டுமில்லை. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கெடுபிடிகள் எதுவும் செய்யமாட்டார்’ என்று தயாரிப்பாளர்  கோவைத்தம்பி மோகனைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

‘கதை கேட்டு அவருக்குப் பிடிச்சிருந்துச்சுன்னா, ஓகே சொல்லிருவார். அதுக்குப் பிறகு கதைக்குள்ளேயே வரமாட்டார். இதை மாத்துங்க, அதை மாத்துங்கன்னு சொல்லமாட்டார்.  அவரோட கேரக்டரை எந்த அளவுக்கு சிறப்பாச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு நடிச்சுக் கொடுத்துட்டுப் போவார்’ என்கிறார்கள் இயக்குநர்கள்.

‘மோகன் படம் போரடிக்காது. நடிப்பு யதார்த்தமா இருக்கும். பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும். குடும்பத்துல இருக்கற எல்லாரும் சேர்ந்து பாக்கலாம்’ என்கிறார்கள் ரசிகர்கள்.

1980-களில் இயக்குநர்களின் ஹீரோவாக இருந்த நடிகர் ‘மைக்’ மோகன் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அவர் கடைசியாக நடித்த ‘சுட்ட பழம்’ திரைப்படம் 2008-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்பு அவர் தமிழில் நடிக்கவே இல்லை.

“மோகன் ஏன் நடிக்கவில்லை..?” என்று கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியபடியே உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் அவரிடத்தில் கேட்டபோது, “நான் நடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே.. எனக்குப் பொருத்தமான.. நல்ல கேரக்டர் வந்தால் நிச்சயமாக நடிப்பேன். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார்கூட கேட்டாங்க. ஆனால் அந்தக் கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கலை. அதனால் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான கேரக்டர் கிடைக்கட்டும். நிச்சயமாக நடிப்பேன்..” என்றுதெரிவித்திருந்த நடிகர் மோகன், இப்போது ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் விஜயஸ்ரீ இயக்கும் ‘ஹரா’ என்ற படத்தில்தான் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐ.பி.சி. சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாம்.

தயாரிப்பாளர்களின் நடிகராக, இயக்குநர்களின் நடிகராக, கதைகளின் நடிகராக, ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகராக வலம் வந்த மோகன் 1987 இல் கௌரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக