செவ்வாய், 15 மார்ச், 2022

நடிகர் பண்டரிபாய் வாழ்க்கை வரலாறு

நடிகை பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1928ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ரங்காராவ் – காவேரிபாய் தம்பதிக்கு மகளாக பிறந்தவர், பண்டரிபாய். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர்.

பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர் என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார். நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார்.

நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய், தனது 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் நாடகத்தில் நடித்தால் என்ன என்று அவரது சகோதரருக்கு தோன்றியது. அதனால், நாடகங்களில் நடிக்க அனுமதி கிடைத்தது.

ஆரம்பத்தில் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களில் நடித்த பண்டரிபாய், பிறகு சமூக கதைகளை கொண்ட நாடங்களிலும் நடித்தார். அவருடைய நடிப்பு திறமையை கண்ட இயக்குநர்கள் கே.ஹிரண்ணையா மற்றும் எம்.என்.கோபால் இருவரும் தாங்கள் இயக்கிய ‘வாணி’ கன்னடப் படத்தில் அறிமுகப்படுத்தினர். கோவை சென்ரல் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு 1940 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் கழித்து 1943 ஆம் ஆண்டு வெளியானது. படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

வாணி படத்தின் படப்பிடிப்பு கோவை சென்ரல் ஸ்டுடியோவில் நடைபெற்ற போது அங்கு பண்டரிபாயை பார்த்த இயக்குநர் சுந்தராவ் நட்கர்னி, அடுத்து தான் இயக்கிய ஹரிதாஸ் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கொடுத்து நடிக்க வைத்தார்.

படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார், எம்.கே. தியாகராஜ பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார். இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்த போது அவருக்கு வயது 14 தான். தமிழில் ஹரிதாஸ் தான் பண்டரிபாய்க்கு முதல் படம். அந்தப் படத்தின் வெற்றி பண்டரிபாய்க்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.

அதன் பிறகு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார், வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி.கே.எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம்.எஸ்.திரவுபதி நடித்தார்.

“வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார், பண்டரிபாய். அந்தப் படம் இந்தியில் பஹார் என்கிற பெயரில் உருவான போது அதிலும் நடித்தார், பண்டரிபாய்.

பண்டரிபாயின் நடிப்பு திறமையை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், அவரை தமிழில் நடிக்க வைக்க விரும்பினார். அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க பி.டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏற்பாடு செய்தார். ஆனால், பண்டரிபாய் தமிழ் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மாறாக தமிழ் கற்றுக் கொடுத்த பி.டி.சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கை கற்றுக்கொண்டார். பிறகு நடிகர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றுக் கொண்டார், பண்டரிபாய்.

ஏவி.எம். நிறுவனத்துடன் இணைந்து நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக நடிக்க பல நடிகைகளை வரவழைத்து வசனம் பேச வைத்து நடிக்க வைத்து பார்த்த இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு, கடைசியில் பண்டரிபாய் சிவாஜிக்கு ஜோடியாக தேர்வு செய்தனர்.

சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

சிவாஜியின் முதல் ஜோடி பண்டரிபாய்தான். இவர்கள் இருவரும் “புது பெண்ணின் மனதை தொட்டுவிட்டு போரவரே” பாடலில் எவ்வளவு அழக்காக இருந்தார்கள். மறக்க முடியுமா?

அதன் பிறகு தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் பண்டரிபாய் நடித்தார்.

'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி' படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தவர், 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.

கன்னடத் திரைப்படமான பெதர கண்ணப்பாவில் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் சிவாஜிக்கு எப்படி இவர் முதல் ஜோடியோ அதே போல கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் முதல் ஜோடியாக நடித்தவர், பண்டரிபாய். அதன் பிறகு ராஜ்குமாருடன் சாண்ட் சாகு, ராயாரா சோஸ் போன்ற படங்களில் நடித்து பாராட்டுக்களை குவித்தார். தனது சகோதரி மைனாவதியுடன் ‘அப்பா ஆ ஹுடுகி’ படத்தில் தோன்றினார். இந்தப் படம் கன்னட சினிமாவில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆருடன் மர்மயோகி உட்பட பல படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், தொடர்ந்து குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடித்தார். கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது நாயகி வேடங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு அக்காள், அண்ணி, அம்மா என்று தான் ஏற்றுக் கொண்ட வேடத்திற்கு பெருமை சேர்த்தார்.

பண்டரிபாயை திரையில் பார்த்தாலே அம்மா பாத்திரத்துக்கு ஒரு மரியாதை வரும். அந்த அளவுக்கு வெகுளியாகவும் பாவமாகவும் தோன்றுவார். "மன்னன்'' படத்தில் பக்கவாதத்தால் முடமாகிப்போன தாயாராக வரும் பண்டரிபாய்க்கு மகனான ரஜினியே சகலமுமாக இருப்பார். தாயாரை கோவில் கோவிலாக தூக்கியபடி "அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்று ரஜினி பாடி நடித்த காட்சிகள் இப்போதும் கண்களுக்குள் இருந்து கங்கையை வரவழைக்கும்.

1943 ஆம் ஆண்டு வாணி படத்தில் நடிக்க தொடங்கிய பண்டரிபாய், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பஸ் விபத்தில் ஒரு கையை இழந்த பிறகு அவர் நடிப்பை நிறுத்திவிட்டார். அவர் கடைசியாக நடித்த படம், 1994 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படம்.  

கலைப்பயணத்தில் தனக்கு உதவியாக இருந்த சிலருக்கு உதவிடும் நோக்கில் `அருணாச்சலம்' படத்தில் நடித்துக் கொடுத்து, எட்டு பேர்களை அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக உயர்த்தினார், ரஜினி. அதில் பஸ் விபத்தில் ஒரு கையை இழந்து, துயரத்தில் இருந்த பண்டரிபாயும் ஒருவர்.

நீண்ட காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், விபத்தால் பாதிக்கப்பட்ட கை நீக்கப்பட்டு தேறிவந்த நிலையி,ல் சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவ செலவுகளை ஏற்றார். ஆனால் மூச்சுத் தினரல் ஏற்பட்டு 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி காலமானார். அவரது ஆசைப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

ஒரு மரபுவழி கொங்கனி சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்த பண்டாரி பாய், மிகவும் பொறுமையான பெண்மணி, சிக்கனமான வாழ்க்கையை நடத்தியாவர். பண்டரிபாயின் கணவர் பெயர் பி.எச்.ராமாராவ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கர்நாடக அரசின் விருதுகளை மூன்று முறை பெற்றுள்ள பண்டரிபாய், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். கர்நாடக மாநிலத்தின் ஒன்பதாம் வகுப்பு கன்னட மொழிப் பாடப்புத்தகத்தில் "குணசாகரி பண்டாரி பாய்" என்று அவரது வாழ்க்கயை சேர்த்து கௌரவித்த்யுள்ளது அரசு.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக