செவ்வாய், 15 மார்ச், 2022

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வாழ்க்கை வரலாறு

1980 கால கட்டங்களில் பட்டையை கிளப்பிய பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். இவர்களில் கணேஷ் எப்போதும் கழுத்தில் செயின்னும், கையில் மோதிரம் என நகை கடை அண்ணாச்சி போல காட்சி தருவார். அந்த இசை நாயகன் கணேஷ் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி பிறந்தவர். இவருடைய அப்பாவுக்கு சொந்த ஊர் திண்டிவனம். அம்மாவுக்குச் சொந்த ஊர் மேல்மருவத்தூர் அருகில் உள்ள சோத்துப்பாக்கம்.

கணேஷ் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆயிரம்விளக்கு மக்கீஸ் கார்டன். தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் படித்தார். பள்ளியில் மதியம் 3:30 மணிக்கு விளையாட்டு பீரீயட் நடக்கும். ஆனால், இவருக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கு பாட்டுப் பாட கிளாஸ் நடக்கும். அன்று அவர் நினைக்கவில்லை. தான் பல நூறு படங்களுக்கு இசைக்கப் போகிறோம். அதற்கான தொடக்கம்தான் இது என்று.

படிக்கிற காலத்திலிருந்தே கணேஷுக்கு இசைக்குள் ஈடுபாடு அதிகமாக இருந்தது. இசையைப் பற்றிய ஞானம் அதிகமாக இல்லாவிட்டாலும், நல்ல சங்கீதத்தை, சாகித்யத்தை உணர்ந்து ரசிக்கிற அளவுக்கு இவருக்கு ஞானம் இருந்துள்ளது. வானொலிப்பெட்டியைத் திருப்பிவிட்டு திருப்பிவிட்டு  மணிக்கணக்காக பக்கத்தில் உட்கார்ந்திருந்து கவனமாக கூர்ந்து கேட்பார். அது கர்நாடக இசையானாலும், இந்துஸ்தானி இசையானாலும், மெல்லிசையானாலும் எதுவாகயிருந்தாலும் ரசிப்பார்.  

அப்போது மனதிற்குள் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டார். என்றைக்காவது ஒரு நாள் ஒரு நல்ல இசைக்கலைஞனாக வரவேண்டுமென்று மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டார். திரைபடங்களை பார்ப்பதும், பாடல் பாடுவதும், அந்த பாடலின் மெட்டுக்கு வேறு வார்த்தைகள் போட்டு பாடுவது என்றும் தனது திறமையை வெளிப்படுத்தினார். மகனின் ஆர்வத்தை கண்ட கணேஷின் அப்பாவுக்கு பெரிய மகிழ்ச்சி. மகன் இசை உலகில் சாதனைப் படைப்பான் என்று அவருக்கு தோன்றி இருக்கிறது.

`தெனாலிராமன்', `நிச்சயத் தாம்பூலம்' படங்களின் கேமராமேனும் இயக்குநருமான வி.எஸ்.ரங்காவிடம் டிரைவராக இருந்தார் கணேஷின் அப்பா. அவரிடம் தனது மகனின் ஆர்வத்தை தெரிவித்து, வி.எஸ்.ரங்கா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.

சின்ன வயசுலயே கணேஷ் துறுதுறு வென்று சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்து கம்போஸிங் இன்சார்ஜ் பணியை அவரிடமே ஒப்படைத்தார், எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தச் சின்ன வயதில் அத்தனை பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததுள்ளது.

முதலில் சங்கரும், கணேஷும் இணைந்தே வாய்ப்பு தேடினார்கள். அப்பா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கணேஷ் சேர்ந்தது போல, பல முயற்சிகளுக்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம், சங்கர் சேர்ந்தார்.  1964 ஆம் ஆண்டு தனி தனியாக வேலைக்கு சேர்ந்தவர்கள், 1965 ஆண்டு முதல் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சேர்ந்தே வேலை செய்தார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பணியாற்றும் போது கவியரசு கண்ணதாசனிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் பெற்றவர்கள், கவியரசு கண்ணதாசன் `நகரத்தில் திருடர்கள்' என்ற படத்தைத் தயாரிக்க தொடங்கிய போது அதில் இசையமைப்பாளர்களாக இருவரையும் அறிமுகம் செய்தார். ஆனால், அந்தப் அடம் பாதியிலே நின்றது.

அதன் பிறகு இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை கவிஞர் கண்ணதாசன் பெற்று தந்தார். அந்தப் படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்களின் திறமை மீது நம்பிக்கை கொண்ட கவியரசு கண்ணதாசன், அவர்களை தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

கவியரசு கண்ணதாசன் திறமை உள்ளவர்களை மட்டுமே அடையாளம் காட்டுவார். அப்படி திறமையோடு இவர்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் அப்போது தான் தயாரித்த மகாராசி படத்தில் அவர்களை இசையமைக்க வைத்தார், சின்னப்பா தேவர்.  எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிய வேகத்திலேயே நின்றது. அதற்கு காரணம், ரவிச்சந்திரன் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தார்.

அதன் பிறகு அவர் குணமாகி நடித்துக் கொடுக்கும் வரை சங்கர் கணேஷ் பெரிய வேண்டுதல்களுடனே இருந்திருக்கிறார்கள். மகராசி படம் 1967 ஆம் ஆண்டு வெளியானது. ‘மகராசி’ படத்தில் இடம்பெற்ற ’வாழ்வில் புது மணம் மணம்’, ’பேசிப் பேசியே பொழுதும் போனது’ போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது. இவர்களுக்கு ஒரு திருப்பமாக அமைந்தது

அதன் பிறகு ஜெய்சங்கர் நடித்த நான் யார் தெரியுமா, சிரித்த முகம், அக்காள் தங்கை, மாணவன், காலம் வெல்லும், கண்ணன் வருவான், கெட்டிக்காரன் என ஜெய்சங்கர் நடிக்கும் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.

தெய்வம் பேசுமா, தேன் கிண்ணம், கங்கா, தாய்க்கு ஒரு பிள்ளை என்று பிசியாக இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் இவர்களுக்கு ஒரு பெரிய வெற்றியையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு, `நான் ஏன் பிறந்தேன்' படத்தில் இவர்களுக்கு கிடைத்தது. அதற்குக் காரணம், எம்.ஜி.ஆர்.

`பதிபக்தி’, `பாலும் பழமும்’, `பாகப்பிரிவினை’, `பாத காணிக்கை’, `பஞ்சவர்ணக்கிளி’, `குடியிருந்த கோயில்’, `நாணல்’, `நான் ஏன் பிறந்தேன்?’ போன்ற படங்களைத் தயாரித்தவர், ஜி.என்.வேலுமணி. அவருடைய மகனும், கணேஷும் நல்ல நண்பர்கள். அதனால், ஜி.என்.வேலுமணியின் வீட்டுக்குப் சென்று வரும் போது வேலுமணியின் மகள் சந்திரிக்காவை பார்க்கும் வாய்ப்பும் கணேஷுக்கு கிடைத்தது.

காலம் அவருக்குள் காதலை விதைத்தது. பூ மலர்ந்த மாதிரி உருவான அந்த காதலை அப்படியே திருமணம் வரை கொண்டு போக வேண்டுமே? பெரிய தயாரிப்பாளரிடம் சென்று பெண் கேட்டால் கொடுப்பாரா? காலம் இசையமைப்பாளர் என்கிற அங்கீகாரத்தை கொடுத்தாலும், டிரைவர் மகன் என்பதை அவர் மறப்பாரா என்ன?

ஆரம்பத்தில் எதிர்ப்பு. அடியாள் மூலம் அடி என மிரட்டல் வந்தாலும் காதலில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். அதன் பிறகு இவர்களின் வைராக்கியத்தைப் பார்த்து மனம் இறங்கினார், வேலுமணி. அதற்கு எம்.ஜி.ஆரும் காரணமாக இருந்தார்.

தயாரிப்பாளர் வேலுமணியிடம் மாப்பிள்ளை கணேஷின் சார்பாக பெண் கேட்டு எம்.ஜி.ஆரின் சகோதரர் சாரங்கபாணி கார் சென்றது. சிவாஜியின் கார் சென்றது. சாண்டோ சின்னப்பா தேவர் கார் சென்றது. இப்படி திரைத்துறையில் மிகவும் முக்கியமானவர்கள் கார்கள் எல்லாம் வேலுமணியின் வீட்டு வாசலுக்கு சென்று நின்றது. சாண்டோ சின்னப்பா தேவரும், மதுக்கூர் ஜமீன்தாரும் கணேஷ் சார்பாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாக இருந்து தட்டை மாற்றி நிச்சயம் செய்தார்கள். பிறகு திருமணம் நடந்தாது.

திருமணம் முடிந்ததும் மணமகள் சந்திரகாவிடம், ஜி.என்.வேலுமணி என்கிற பணக்கார பெண் என்கிற மமதை இன்றி கட்டிய கணவன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார், எம்.ஜி.ஆர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருவரும் புதுமண தம்பதிக்கு விருந்து கொடுத்தார்கள். ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டில் சாப்பிடும் போது, `என் வீட்டுல போய் இருந்துகொள்’ என்று நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டின் சாவியை கொடுத்திருக்கிறார், எம்.ஜி.ஆர்.

‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திற்கு இசைஅமைக்க எம்.ஜி.ஆர். அவர்களை அணுகியபோது, விவரம் அறிந்த கணேஷின் மாமனார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான் அவரது படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்.

இதனால் படப்பிடிப்பு வேலைகள் தாமதம் ஆகின. எம்.ஜி.ஆரின் ஆதரவினால் ஒருவழியாக என் ஜி.என்.வேலுமணி ஒத்துக்கொண்டார். பாடல்கள் பதிவாகின. சித்திர சோலைகளே எனும் பாரதிதாசன் பாடல் படத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்ததில் எம்.ஜி.ஆருக்கு பெருமகிழ்ச்சி.

இதயவீண படத்திற்கு, இசைஅமைக்க வாய்ப்பு கேட்டபோது இசைந்த எம்.ஜி.ஆர்., யாருமே எதிர்பார்க்காத வகையில் அன்றைய காலகட்டத்தில் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கி கொடுத்துள்ளார்.  

பொன்னந்தி மாலை பொழுது பாடல் கம்போசிங் செய்தபோது பல ட்யூன்கள் போட்டும் சரிவராமல் திணறியபோது, பாடல் கம்போசிங் தாமதம் குறித்து விவரம் அறிந்த எம்.ஜி.ஆர்., கணேஷை அழைத்து எல்லா ட்யூன்களையும் போட்டு காட்ட செய்து, தன்னுடைய நுட்பமான இசை ஞானத்தால் பாடல் உருவாக பெரும் உதவி செய்து, பிரச்சியை தீர்த்து வைத்திருக்கிறார்.

ஒருநாள் பாடல் கம்போஷிங்காக மகாலிங்கபுரம் வீட்டில் இருந்து ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு கணேஷ் புறப்பட்டுக் கொண்டிருந்த போது இயக்குநர் ஏ.எஸ்.பிரகாசம், தயாரிப்பாளர்கள் ஜூடோ ரத்னம், ரகு ஆகியோர் அவரை சந்தித்தனர்.

அடுத்து ‘ஒத்தையடி பாதையிலே’ என்கிற படத்தை எடுக்க இருக்கிறோம். அதில் நீங்கள்தான் கதானாயகனாக நடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதும், அதிர்ந்து போனார், கணேஷ்.

என்னை மேலிருந்து கீழே வரைக்கும் ஒரு முறை பாருங்கள். கத்தரிக்காய்க்கு கால்முளைத்த மாதிரி இருக்கிறேன். என்ன போய் ஹீரோ என்று நினைக்கிறீர்களே என்று கேட்டவர், படத்துக்கு வேண்டுமானால் இசையமைக்கிறேன். வேறு ஹீரோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அவர்கள் விடவில்லை. பிடிவாதமாக இருந்தார்கள். நேரம் ஆனதால் தான் ஏவி.எம். செல்வதாக கூறிவிட்டு கணேஷ் சென்றுவிட்டார். அவர்களும் அவர் கார் பின்னால் தொடர்ந்து ஏவி.எம்.ஸ்டுடியோ சென்று காத்திருந்தார்கள். அங்கிருந்த இசையமைபாளார் சங்கரிடமும் சொல்லி பேச வைத்தனர்.

சினிமாவில் நடிக்க நிறைய பேர் முயற்சி செய்கிறார்கள். வாய்ப்பு கேட்டு அலைகிறார்கள். உன்னை தேடி வாய்ப்பு வருகிறது. நீ ஏன் உன்னை தேடி வரும் வாய்ப்பை மறுக்கிறாய். போய் நடி. நீயும் டூயட் பாடு என்று இசையமைப்பாளர் சங்கரும், கணேஷை உசுப்பேற்றினார். ஒரு வழியாக கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார், கணேஷ்.

முதல்நாள் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் ஆரம்பமானது. ஓடிச்சென்று கதாநாயகி கட்டி பிடித்து தூக்கி மூன்று ரவுண்டு சுற்ற வேண்டும். நடன இயக்குநர் சுந்தரம், காட்சியை விளக்கிவிட்டு ஷாட் எடுக்கக் ஆயத்தமானார். புதுமுகநாயகியை தூக்கி சுற்றி வெயிட் தாங்க முடியாமல் அவருடன் சாய்ந்துவிட்டாராம், கணேஷ்.  

இப்படி முதல்நாள் முதல் படத்தில் நடிக்கத் தொடங்கிய கணேஷ், புகுந்த வீடு, நீ ஒரு மகாராணி, தேவியின் திருவிளையாடல், நீதியின் மறுபக்கம், நான் பாடும் பாடல், நெஞ்சமெல்லாம் நீயே என ஏழு படங்களில் நடித்தார். மனைவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க படங்களில் நடிப்பதை நிறுத்தி, இசையமைப்பதில் மட்டுமே பிறகு கவனம் செலுத்தி இருக்கிறார்.

கவியரசு கண்ணதாசன் அடையாளம் காட்ட தேவரின் உதவியால் சினிமா உலகில் பெரும் புகழ் பெற்ற காரணத்தால், அந்த நன்றியை எப்போதும் நினைவு கூறும் விதமாக திரைப்படங்களில் தங்கள் பெயர் டைட்டிலில் வரும் போது ‘கவிஞர் வழங்கிய தேவரின்’ சங்கர் கணேஷ் என்றே போட வைத்தனர்.

ஒவ்வோர் இசையமைப்பாளர்க்கும் தனித்த பெண்குரல் ஒன்று அமைந்தது. விசுவநாதனுக்குச் சுசீலாவும், இளையராஜாவுக்கு ஜானகியும் அமைந்தாற்போல் சங்கர்-கணேஷுக்கு வாணி ஜெயராம் அமைந்தார். 'மேகமே மேகமே... பால் நிலா தேயுதே....' என்னும் பாடலை வேறு குரலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அப்படியொரு கனத்த துயரம் வழிகின்ற குரல்.

சசிரேகா, கிருஷ்ணமூர்த்தி போன்ற பாடகர்கள் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். பல பாடகர்களை, பாடகிகளை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களின் கால்ஷீட் கிடைக்கப்பெறாத தயாரிப்பாளர்களுக்கெல்லாம் தோள் கொடுத்தார்கள்.

கணேஷ் சினிமா உலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் ஒருவரிடம் “இந்த செயின் என்ன விலை” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “நீ எல்லாம் இந்த செயினை தொட்டு பார்க்க கூட தகுதி இல்லாதவர். அதை வாங்க நினைக்கக் கூட உன்னால் முடியாது’ என்று கூறி இருக்கிறார். அந்த வார்த்தை அவருடைய மனதை மிகவும் துன்புறுத்தியது.

எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி அவர்களிடத்தில் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உழைத்த கணேஷ், சம்பாதிக்க தொடங்கிய பிறகு நிறைய தங்க நகைகளை வாங்கினார். அதை எல்லாம் எங்கு போனாலும் போட்டுக் கொண்டு செல்வாராம்.

1980களில் கணேஷ் புகழின் உச்சியில் இருந்தா நேரம். அப்போது ஒரு நாள் அவருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அஅதை அவர் பிரித்த போது, பலத்த சத்தத்துடன் வெடித்தது. சுற்றிலும் ஒரே புகை. அவருக்கு கண்னெல்லாம் எரிச்சல், பார்சலைப் பிடித்திருந்த கைகளில் காயம். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். கைகளில் ஏற்பட்ட காயம் ஆறியது. ஆனால், தழும்புகளை மறைக்க இன்று வரை தொடர்ந்து கையுறை அணிந்து வருகிறார்.

அந்த விபத்து காரணமாக அவரது பார்வை மங்கலானது. அவரால் எதையும் தெளிவாக பார்க்க இயலவில்லை. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளானார். சமீபத்தில் நவீன சிகிச்சைப் பற்றிக் கேள்விப்பட்டு பார்வையை திரும்ப பெற்றிருக்கிறார்.

விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை அமைப்பாளர்களுக்கு பிறகு சங்கர் - கணேஷ் எனும் இரட்டையர்களை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் இசை இயக்குனர், பாடகர் என பல துறைகளில் இருவரும் சேர்ந்து பணியாற்றி உள்ளார்கள். இவர்களுடைய பாடல் எல்லாம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிறமொழி மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 16 வருடங்களில் 193 படங்களில் இசையமைத்தனர். தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.

நீண்டநாள்கள் இணைந்து இசையமைத்த இவ்விருவரும் சில ஆண்டுகளுக்கு பின்னர் பிரிந்து இசையமைக்கத் தொடங்கினர். ஆனால் தனியாக இசையமைக்கத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே சங்கர் மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு கணேஷ் தனியாக இசையமைத்து வந்தார்.

சங்கரின் மகன் பாலசுப்ரமணியம், சின்னி ஜெயந்தின் உனக்காக மட்டும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கணேஷின் மகன் ஸ்ரீகுமார் நடிகரானார். இப்போதும் வெள்ளித்திரை மற்றும் சின்னித்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வெளியான நாய்சேகர் படத்தில் காமெடி வில்லனாக நடித்து மீண்டும் நடிப்பு பணியை தொடங்கி இருக்கிறார், கணேஷ். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரவமாக இருக்கிறார்.

சங்கர்-கணேஷ் இசைக்கோத்த பாடல்கள் மக்களை மகிழ்வித்தன. தயாரிப்பாளர்களை வாழவைத்தன. இன்றும் கேட்கப்படுகின்றன. அப்பாடல்கள் காற்றுள்ளவரை என்றைக்கும் உலவிக்கொண்டிருக்கும்

தொகுப்பு : ஜி.பாலன் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக