இந்தியில் முதல் பேசும் படத்தை 1931 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 14 ஆம் தேதி தயாரித்து வெளியிட்ட ஆர்தேஷிர் எம்.இரானி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசும்
படங்களை தயாரிக்க முடிவு செய்து இயக்குனராக எச்.எம்.ரெட்டி. என்பவரை
பயன்படுத்தினார். தென்னிந்தியரான எச்.எம். ரெட்டி, பல மௌனப்
படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். ஆர்தேஷிர் எம்.இரானி இயக்கிய ‘ஆலம் ஆரா’
படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை.
தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார்
மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும்
காளிதாஸுக்கு மணம் செய்துவைத்து விடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.
இதுதான் காளிதாஸ் படத்தின் கதை.
இதில் மன்னர் விஜயவர்மன் மகளாக வித்யகுமாரி
கதாபாத்திரத்தில் தமிழ் நாடக மேடைகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த டி.பி. ராஜலட்சுமி என்பவரை முடிவு செய்த
எச்.எம்.ரெட்டி,, காளிதாஸ் வேடத்தில் நடிக்க தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட பி.ஜி.வெங்கடேஷ்
என்கிற நாடக நடிகரை ஒப்பந்தம் செய்தார். டி.பி.ராஜலட்சுமி, வெங்கடேஷ் இருவருமே
நாடக மேடைகளில் நன்றாக பாடி நடித்து புகழ் பெற்றவர்கள். தமிழ் வசனங்ளை பேசுவதிலும்,
பாடுவதிலும் பெரிய திறமைசாலிகள். தங்களது குரலால் ரசிகர்களை கவர்ந்தவரகள்.
பேசும் படத்திற்கு நன்கு நடிக்க கூடிய அனுபவம்
உள்ள நடிகர்களும், அதே சமயம் அவர்களுக்கு குரல் வளமும் இருக்க வேண்டும் இல்லையா.
அப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்தார்கள். கோவில் பூசாரியாக எல்வி.பிரசாத், தேவாரம்
ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா
தேவி, எம்.எஸ்.சந்தானலட்சுமி உட்பட பலர் ஒப்பந்தம் செய்து முதல்
பேசும் படம் உருவான ‘ஆலம் ஆரா’ படம் உருவான அரங்கிலேயே தமிழின் முதல் பேசும் படமான
‘காளிதாஸ்’ படத்தையும் எடுத்தார்கள்.
உரையாடல்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய
மொழிகளில் இருந்தன. இந்த படம் "விடாபோன்" முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில்
இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில்
பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்பட்டது.
ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுனர்களால் ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி
ஒலி பதிவு செய்யப்பட்டதாக தகவல்.
அப்போது பாடகர்கள் பாடகிகள் மூலம் ஒலிப்பதிவு
செய்யப்பட்டு பாடல் இசை தட்டுகள் மக்களிடம் பெரும் வரவேபை பெற்ற காலம். அதனால்,
இந்த பேசும் படத்திற்குள் அதிக பாடல்கள் வைக்க வேண்டும் என்று ஐம்பது பாடல்களை
வைத்தார்களாம். “மன்மத பாணமடா... மாரினிலே பாயுதடா” என்கிற பாடல் சிறந்த காதல்
பாடலாக பேசப்பட்டது. பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இந்தப் படத்தின் மூலம்
முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
"ராட்டினமாம் காந்தி கை பாணமாம்" என்ற தேசபக்தி பாடலும் இதில் இடம்
பெற்றிருந்தது.
படம் முடிந்து 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கபட்டது. அதுவரை ஊமைப் படங்களைக்
கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் முதல் தெனிந்திய பேசும் படத்தை காண கூட்டம் கூட்டமாக
கூடினார்கள். பம்மாயில் இருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தை வந்தடைந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். படப்பெட்டிக்கு ரோஜா மாலைகள் சூட்டப்பட்டன. தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பத்தி கொளுத்தல்,
சூடம் காட்டல் என்று அமர்க்களப்பட்டது. வால்டாக்ஸ்
சாலையில் படப்பெட்டியுடன் பெரிய பேரணிபோல கூட்டம் கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை
வந்தது.
முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான ‘கினிமா
சென்ரல்’ திரையரங்கம் பிறகு முருகன் டாக்கீஸ் என்ற பெயரில் இயங்கியது. இந்தியாவின்
முதல் பேசும் படமான "ஆலம் ஆரா"வும் இந்த திரையரங்கில்தான் திரையிடப்பட்டது.
இருந்தாலும் முதல் தமிழ் பேசும் என்பதால் ரசிகர்கள் ஒரு திருவிழாவைப் போல
கொண்டாடினார்கள். அன்று தீபாவளி வேறு. சினிமா அதிசயம் இல்லையா.
காளிதாஸ் படம் அவசரத்தில் தயாரிக்கப்பட்ட படம்
என்பதால் பல தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தபோதிலும், அதையும் தாண்டி இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப்
பெற்றது. ராஜலக்ஷ்மியின் பாடலூக்காவும், நடிப்பிற்காகவும்
பாராட்டப்பட்டது, மேலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப்
பெற்றது.
இந்தப் படத்துக்கு செலவு செய்த பணம் வெறும் 8 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் வசூலித்ததோ 75
ஆயிரம் ரூபாய். கேட்கும் போதே பிரமிப்பாக
இருக்கிறது அல்லவா. இருந்தாலும் ஒரு வருத்தத்திற்குரிய
செய்தி... 1930களில் எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை
காலப்போக்கில் அழிந்து விட்டன. அதில் நம் பெருமைக்குரிய
காளிதாஸ் திரைப்படமும் ஒன்று. நம் தலைமுறையினருக்கு அந்தப் படத்தை
பார்க்கும் பாக்கியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும்
அவர்களது முயற்சி இன்று மேலோங்கியிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக