வியாழன், 13 அக்டோபர், 2022

முதல் பேசும்பட நாயகன் பி.ஜி.வெங்கடேஷ்

இந்த பகுதியில் இன்னைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகிற தகவல்  தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் படத்தில் கதையின் நாயகனாக நடித்த பிஜி வெங்கடேசன் பற்றித்தான்...  பிஜி வெங்கடேசன் 1910 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி சேலத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே பாட்டு கூத்து என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், நாடகங்கள் நடக்கிற இடம், கூத்து நடக்கிற இடங்களில் தவறாமல் ஆஜராகி விடுவார்.

அப்படி நாடகத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல நாடக மேடைகளில் ஏறும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதில் பி.யு,சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்த போது பெரிய நம்பிக்கையும் மரியாதையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும், தமிழ் வசனங்ளை  பேசுவதிலும்,  பாடுவதிலும் பெரிய திறமைசாலி. தனது குரல்வளத்தால்  எல்லோரையும் கவனிக்க வைத்தவர். பின்னாளில் இவரை தென்னிந்திய சைக்கால் என பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு நடிப்போடு பாட்டு பாடுவதிலும் தன் குரல் வளத்தால் புகழின் உச்சியை அடைந்தவர்.

பாட்டு பாடவும், வசனம்  பேசவும் பொருத்தமான நடிகராக பி.ஜி.வெங்கடேசன் இருந்ததால் அவருக்கு காளிதாஸ் பட வாய்ப்பை வழங்கினார், இயக்குநர் எச்.எம்.ரெட்டி. 

கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்து விடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.

இதில் பி.ஜி.வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்‌ஷ்மி இளவரசியாகவும் நடித்தனர். முதல் பேசும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகர்கள் பேசி நடித்தனர். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்‌ஷ்மி தமிழிலும், கோவில் பூசாரியாக நடித்த எல். வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.

தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் படம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி தென்னிந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை ஊமைப் படங்களைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் பேசும் படத்தை காண கூட்டம் கூட்டமாக கூடினார்கள். படத்தின் வெற்றியும் வசூலும் பி.ஜி.வெங்கடேசனை மகிழ வைத்தது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தன.

காளிதாஸ் படத்திற்கு பிறகு வெங்கடேசன் நடிப்பில் வெளியான படம், இரு சகோதரர்கள். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய அந்தப் படத்தில் கே.பி.கேசவன் கதாநாயகனாக நடிக்க, அதில் பொம்மை வியாபாரி பாத்திரத்தில் நடித்த வெங்கடேசன், “வேடிக்கை பொம்மை - விளையாட்டு பொம்மை” என்கிற பாடலையும் பாடி இருந்தார்.

அடுத்து வெளியான பட்டினத்தார் படத்தில் பண்டாரமாக நடித்திருந்தார். இதில் “காயமே இது பொய்யடா... காற்றடைத்த பையடா” என்கிற  பாடலை பாடி நடித்திருந்தார். அந்தப் பாடல் பெரும் புகழ் பெற்று வெங்கடேசனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு 1936 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் படத்தில் மார்வாடியாகவும், அம்பிகாவதி படத்தில் தோட்டக்கார முனியனாகவும் நடித்திருந்தார்.  டி.ஆர்.,சுந்தரம் இயக்கிய தாயுமானவன் படத்தில் அப்பாவி கணவராக நடித்தவர், டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ஜோதி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து, மதுரை மாரியப்பா சுவாமிகள் இசையில் உருவான  விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால், அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் என மூன்று பாடல்களை பாடி இருந்தார்.

1938ஆம் ஆண்டில் விஷ்ணு லீலா படத்தில் மூன்று வேஷங்கள், தட்சயங்கம் படத்தில் இரண்டு வேஷங்கள் நடித்து இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.

1939ஆம் ஆண்டு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் மாயா மச்சந்திரா, சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கத்தில் சாந்தா சக்குபாய், சம்பத்குமார் இயக்கத்தில் பம்பாய் மெயில் என மூன்று படங்களில் நடித்திருந்தார்., வெங்கடேசன்.

அதன் பிறகு 1940 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து, “பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே” என்கிற பாடலையும் பாடி இருந்த வெங்கடேசன், அதே ஆண்டில் பூலோகம் என்கிற படத்தில் சாது சச்சிதானந்தனாகவும், ஸ்ரீ பரசுராமர் படத்தில் தபஸ்வியாகவும், நடித்தார். மேலும் சதி முரளி, திலோத்தம்மா, அம்பரீஷன் சரித்திர படமான பக்தி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

1941 ஆம் ஆண்டு கதம்பம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மந்தாரவதி, வேதவதி ஆகிய படங்களில் நடித்த வெங்கடேசன், 1942 ஆம் ஆண்டு குமாஸ்தாவின் பெண், சன்யாசி, மாயஜோதி, கங்காவதார் ஆகிய நான்கு படங்களில் நடித்தார். அதில் குமாஸ்தாவின் பெண் படத்தில் "பாறை மானிடா" என்கிற புகழ்பெற்ற பாடலையும் பாடி இருந்தார்.

அதன் பிறகு 1947 ஆம் ஆண்டில் பொன்னருவி, கங்கணம், 1948 ஆண்டில் ராஜமுக்தி, ஜம்பம், ஞானசௌந்தரி, பிழைக்கும் வழி, மோகினி, கலியுகம் போன்ற படங்களில் நடித்தார். இதில் கலியுகம் படத்தை அவர் பார்க்கவில்லை. ஆமாம், அந்தப் படம் 1952 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அந்தப் படம் வெளியாகும் முன்பே 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அன்று தனது 40 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

பல திரைப்படங்களில் சன்யாசி, பண்டாரம், சாது, யோகி வேடங்களில் அவருக்கு கிடைத்தன. இந்த சின்ன வேடங்கள் அவருக்கு கிடைக்க காரணமாக இருந்தது அவருடைய குரல் மட்டுமே.

அந்த காலத்தில் காட்சியை நகர்த்த அவ்வப்போது பாடல்கள் தேவைப்பட்டன அதைப் பாட ஒரு வண்டிக்காரன், பிச்சைக்காரன், சன்னியாசி போன்ற பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பாட்டு பாடவும் இது போன்ற பாத்திரங்களுக்காக பொருத்தமாகவும் இருந்த காரணத்தினால் பி.ஜி.வெங்கடேசன் அதிகமாக பயன்பட்டார்.

சோகப் பாட்டிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கிய பிஜி வெங்கடேசன் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகன் என்கிற பெருமையை பெற்றவர். அவர் மறைந்தாலும் அவரை தமிழ் சினிமா என்றும் மறக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக