ஞாயிறு, 30 அக்டோபர், 2022

பாபாநாசம் சிவன் வாழ்க்கை வரலாறு

சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்த தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், போலகம் என்னும் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவரம் பாபநாசம் சிவன். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராம சர்மா. ஆனால், ராமையா என்றே அழைத்தனர். 

இவருக்கு 7 வயதாக இருந்தபோது, ​​அவரது தந்தை இறந்தார். அவரது தாயார் யோகாம்பாள், தனது மகன்களுடன், தஞ்சாவூரிலிருந்து வெளியேறி, தனது மாமாவின் உதவியை நாடுவதற்காக 1899 இல் திருவனந்தபுரத்திற்கு சென்றார். திருவனந்தபுரத்தில் கரமனை என்கிற பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்த பஜனை கோஷ்டி ஒன்றில் பாடி வந்தார். பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது. 

பிரபல வக்கீல் பழையவலம் சுப்பய்யர் மகள் அம்மணி என்கிற லட்சுமியைக் கரம்பிடித்த சிவன், சில மாதங்களில் தாயை இழக்கிறார். தாயின் பிரிவு அவரை வேதனைப் படுத்தியது. திருவனந்தபுரத்திலிருந்து தஞ்சாவூருக்குத் திரும்பிய சமயத்தில் நாடோடிபோல் திரிந்தார். ஒருமுறை கணபதி அக்ரஹாரத்தில் நான்கு முழ வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சிவன் வருவதைப் பார்த்தார்கள் பக்தர்கள். நெற்றியிலும், தோள்பட்டையிலும், மார்பிலும் பட்டை பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராட்ச மாலை. ‘அரும் பொன்னே, மணியே’ என்ற தாயுமானவர் பாடலை பக்தி மணம் கமழ அவர் பாடிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போனார்கள் பக்தகோடிகள்.

‘‘கைலாசத்திலிருந்து அந்தப் பரமசிவனே நேரடியாக வந்து தரிசனம் தந்ததுபோல் இருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டார் சாம்பசிவ ஐயர் என்கிற பக்தர்.

இப்படி சிவனாக மாறிய ராமையா, பாபநாசத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய தன் சகோதரர் ராஜகோபாலுடன் சிறிது காலம் தங்கினார். பாபநாசத்தில் தங்கியதால் சிவன் தோற்றத்தில் அவரை எல்லோரும் பார்த்தால், அவரை எல்லோரும் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர். 

திருவனந்தபுரத்தில் நீலகண்டதாசரிடம் இருந்து பாடமானா தேவாரமும் திருவாசகமும் சிவனுக்கு தெரியவந்தன. தாயுமானவரின் பாடல்களைப் பாடம் செய்துகொண்டார். திருப்புகழ் மனப்பாடமானது. நந்தன் சரித்திரம் தெரிந்துகொண்டார். பல உருக்கமான நாமாவளிகளை அவரல் பாட முடிந்தது.

இந்த நிலையில் சென்னை மைலாப்பூருக்கு குடியேறுகிறார். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதானப் பாடகராகிறார். கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடுகிறார். மயிலாப்பூரில் வழக்கறிஞராக இருந்த வி.சுந்தரம் அய்யர் அறிமுகம் கிடைக்க அவரிடம் நட்பு கொள்கிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிள்ளைகளுக்கு இசை கற்றுக் கொடுக்கிறார். 

காலம் சுந்தரம் அய்யரின் மகன் எஸ்.ராஜம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு பாடல் எழுதி இசையமைக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. படக்குழுவுடன் மூட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டு கோலாப்பூர் சென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். 

அவரது திறமையை அறிந்த ஆர்.சுப்பிரமணியம், தனது பவளக்கொடி படத்திற்கு பாடல்கள் எழுத கேட்டுக் கொண்டார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி, எஸ்.எஸ். மணி பாகவதர் ஆகியோர் பாடுவதற்கு ஏற்ப எழுதி கொடுத்தார், சிவன். பவளக்கொடி படம் வெளியாகி பாட்டும் வசனமுமாக பேசப்பட்டது. சிவனுக்கும் புகழ் கிடைத்தது. 

அசோக்குமார் படத்தில், உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ, பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் பாடல்களை இன்றும் நாம் காதுகளில் ஒலிக்கின்றன. ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றார் உண்டோ, அன்னையும் தந்தையும் தானே பாட்லகளி எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கலாம். சிந்தாமணி படத்தில் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி, மனமே கணமும் மறவாதே பாடல்கள் நிவிலும் நீங்காத அற்புத பாடல்கள். சிவகவி படத்தில் வதனமே சந்திரபிம்பமோ பாடல், திருநீலகண்டர் படத்தில் மறைவாய் புதைத்த ஓடு இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் ... 1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவைகள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  

பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதினாராம்.  சங்கீத கலாநிதி விருது பெற்ற சகோதரி-சகோதரர்களான டி கே பட்டம்மாள் மற்றும் டி கே ஜெயராமன் இருவரும் இவருடைய சீடர்கள். அவர் பட்டம்மாளுக்கு பல கிருதிகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும் அவர் படங்களுக்கு சிவனின் பல பாடல்களையும் பாடினார். 

பாபநாசம் சிவனின் தோற்றத்துக்கு தங்குந்த வேஷம் கிடைத்ததும், அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கே.சுப்பிரமணியம் வற்புறுத்தி, அவரை தனது பக்த குசேலா படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவர் இயக்கிய தியாகபூமி படத்தில் கதையின் பிராதான பாத்திரத்தில் நடிக்க வைத்து பரபரப்பாக பேச வைத்தார். மறுபடியும் சேவாசதனம், குபேரகுசேலா படங்களிலும் நடிக்க வைத்தார். 

பாபநாசம் சிவனுக்கு பி.எஸ். கீர்த்திவாசன், பி.எஸ்.ராமதாஸ் என இரண்டு மகன்கள், நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி இரண்டு மகள்கள்.  பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால் ஐயரின் மகள்தான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதல்வருமான வி.என். ஜானகி. 

அந்த காலத்தில் பாடல் மற்றும் இசையால் மக்கள் மனதில் நின்ற அவருக்கு தமிழக அரசு 1961 ஆம் ஆண்டிண் கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு ‘சிவபுண்ணியகானமணி’ என்கிற பட்டத்தை வழங்கியது.1962 இல் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார், மேலும் 1969 இல் "தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை" வழங்கிய சங்கீத கலாசிகாமணி விருதைப் பெற்றார். அவருக்கு 1971 இல் சங்கீத கலாநிதி வழங்கப்பட்டது.  1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒண்ணாம் தேதி நம்மிடம் இருந்து மறைந்தார்.  அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும் என்பதில் ஐயமில்லை. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக