செவ்வாய், 1 நவம்பர், 2022

முதல் படத்தின் கதாசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்

இன்னைக்கு இந்தப் பகுதியில் எந்த கலைஞரைப் பத்தி தெரிஞ்ச்சுக்கப் போறோம் தெரியுமா?.... நாடகப் பேராசிரியர் சம்பந்தம் முதலியார் பற்றித்தான்.... என்னப்பா இது.... சினிமா காரவுங்களைப் பத்திதான் பேசிகிட்டு வந்தோம்... திடீர்னு நாடக கலைஞரை பார்க்க போயிட்டியே... அப்படின்னா...  தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் அய்யா தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை எப்போ சொல்லப் போறே... என்று கேட்பது எனக்கு புரிகிறது... 

நாம ஒரு ஆர்டர்ல போயிகிட்டு இருக்கோம்.... 1916ல் ஆரம்பித்த மௌனப் படத்திலிருந்து 1931ல் ஆரம்பித்த பேசும் படத்திலிருந்து அப்படியே அந்த ஆண்டுகள் வரிசைப்படி போயிகிட்டு இருக்கோம்... அப்படி வந்த படங்களில் யார் யார் என்னென்ன பண்ணிருக்காங்கன்னு புதுசா யார் வந்தாங்க... இப்படி பாத்துகிட்டு போகும் போது... இந்த 1934 ஆம் ஆண்டு வெளியான சதி சுலோச்சனா படம் இருக்குல்ல...   அந்தப் படத்துக்கு கதை, வசனமெழுதி டைரக்ட் பண்ணிருக்காரு.... நம்ம நாடக ஆசிரியர் பம்மல் சம்பந்தம் அய்யா... அவர்கள்... அதனால்தான் அவரைப் பத்தி.... என்ன சொல்றீங்க... 

சென்னையில் பம்மல் வாழ்ந்த விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கு நாலாவது பிள்ளையா 1873ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் நாள் பிறந்தவர், சம்பந்தம். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஞானசம்பந்தம்.... தந்தை வேதரங்கம் முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்திருக்கிறார். 

சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு வேதனைப் பட்டார். பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் கவனத்தை திசை திரும்பின. அதுக்கு காரணம், அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்து. அது போல நாமும் ஒரு நாடகக் குழு அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார்... சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் என பல பேர். 

22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது. அதன் பிறகு 80 நாடகங்கள் எழுதினார். அதில் `புஷ்பவல்லி', `அமலாதித்யன்', `மனோகரா' போன்றவை முக்கியமானவை. ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice போன்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.

முதல் முறையாக தமிழ் நாட்டில் உருவான மௌனப் படமான கீசகவதம் படத்திற்கு 1916ஆம் ஆண்டு இவர்தான் கதை எழுதினர். அதே போல 1932ஆம் ஆண்டு வெளியான முதல் முழுநீள பேசும் படமான காலவா என்கிற படத்திற்கு இவரது காலவ ரிஷி என்கிற நாடகத்தின் கதையை அப்படியே பயன்படுத்தினார், அவரது நண்பர் வடிவேலு நாயக்கர். 

அடுத்து அவரது சதி சுலோச்சனா கதையை அவரை இயக்கினார். 1934ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் M.G.நடராஜ பிள்ளை,                   நாகர்கோவில் சுந்தரம்பாள், T.N.நடராஜ பிள்ளை, K.T.ருக்மணி, A.R.சாரங்கபாணி, துர்காபாய், P.சுப்பையா தேவர், சுலோசனா என பலரும் நடித்தனர். 

அந்தப் படத்திற்கு பிறகு மனோகரா என்கிற படத்திற்கு 1936ஆம் ஆண்டு கதை, வசனம் எழுதினார். இந்தப் படத்தை அரல்கா - காபூலி சாகிப் இருவரும் இணைந்து இயக்கினார். UATசெல்வம், K.R.சாரதாம்பாள், P.G.வெங்கடேசன்,  K.T.ருக்மணி, T.M.கமலவேணி உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை பாரத் லட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாதி சுலோச்சனா படத்தையும் அதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது.  

1935 ஆம் ஆண்டு வெளியான ரத்னாவளி, 1938 ஆம் ஆண்டு வெளியான யயாதி, 1939ஆம் ஆண்டு வெளியான ராமலிங்க சுவாமிகள், 1940 ஆம் ஆண்டு வெளியான ஊர்வசி சாகசம், 1941 ஆம் ஆண்டு வெளியான சந்திரஹரி, சபாபதி, 1943ஆம் ஆண்டு வெளியான தாசிப் பெண், 1948 ஆம் ஆண்டு வெளியான வேதாள உலகம் ஆகிய எட்டு படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார். 

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய பல நூல்களை தமிழ் நாடு அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. 916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்ற சம்பந்த முதலியார், 1959 இல் சங்கீத நாடக அகாதமி விருதும், 1963 இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதும் பெற்றார். 

நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட சம்பந்த முதலியார் தனது 91 வயதில் மறைந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக