செவ்வாய், 1 நவம்பர், 2022

சிதம்பரம் ஜெயராமன் வாழ்க்கை வரலாறு

'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்', ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே…’ போன்ற காலத்துக்கும் நிலைத்து நிற்கும் இந்த திரையிசை பாடலை பாடியவர்... சிதம்பரம் ஜெயராமன்.  என்ன அற்புதமான குரல்....  கம்பீரமான இனிமையான.... மயக்கும் குரல்.... அது. 

இந்த சிதம்பரம் ஜெயராமன் யார் தெரியுமா? முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன். அதாவது மு.க. முத்துவின் தாய்மாமன். இந்த அறிமுகத்தைவிட இவரை பாட்டு சித்தர் அல்லது இசை சித்தர் என்று தமிழ்த் திரையுலகம் அழைக்கிறது. கலைஞர் அய்யாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க இவர்தான் காரணம்.... இவர்தான் நாடகம் எழுதிக் கொண்டிருந்த கலைஞர் அய்யாவை சினிமாவுக்கு வசனம் எழுத சேலத்துக்கு அழைத்து சென்றவர்.... சரி அதுக்கு முன்னாடி இவர் எப்படி சினிமாவுக்கு வந்தார்ன்னு தெரிஞ்சுக்குவோம்... 

கோயில் நகரமான சிதம்பரத்தில் 1917-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாள் பிறந்தார், ஜெயராமன். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். தனது தந்தை மூலமாக இசை பயின்றார், ஜெயராமன். அண்ணன் கோபாலகிருஷ்ணனும்  சங்கீத வித்வான். மூன்று வயதில் ஜெயராமன் பாடும் போது பக்கத்து வீட்டுக்காரர்கள் மெய்மறந்து நின்று கேட்பார்கள். அப்படி இருக்கும் குரலின் இனிமை. 

நாளடைவில் பக்திப்பாடல்கள் பாடுவது ஜெயராமனுக்கு மூச்சுபோல மாறிபோனது. சிதம்பரத்திலும் பிறகு பல முக்கிய கோயில்களிலும் அவர் பாடினார். இவரது இசையும், நடிப்பும்….. ஏழு வயது முதல்_ “பால மீன ரஞ்சனி சங்கீத சபா”வின் நாடகங்கள் மூலம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ஜெகநாதய்யர் என்பவர் நடத்திய இந்த நாடக சபாவின் மூலம் கே.சாரங்கபாணி போன்ற பலர் திரையுலகிற்கு வந்தனர். அவர்களில் இவரும் ஒருவர்.

நாடக்கக் குழுவில் உள்ளவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த போது இவருக்கும் ஸ்ரீகிருஷ்னலீலா படத்தில் கிடைத்தது. ஏஞ்சல் பிலிம்ஸ் சார்பில் B.V.ராவ் இயக்கிய அந்தப் படத்தில் மொத்தம் அறுபது பாடல்கள். அதில் கிருஷ்ணனாக நடித்த இவருக்கு அதிகமான பாடல்கள். இவருடன், P.S.சிவபாக்கியம், C.S.ராமண்ணா, K.S.ராஜாம்பாள், C.V.V.பந்துலு, M.S.முத்துகிருஷ்ணன் என பலர் நடித்தனர்.... 

1935ல் நல்லதங்காள் படத்தில் மூத்த மகனாகவும், பக்த துருவன் படத்தில் துருவனாகவும், இழந்த காதல் படத்தில் சீனுவாகவும், கிருஷ்ணபக்தியில் நாரதராகவும் நடித்தார். மேலும் லீலாவதி சுலோச்சனா, பூம்பாவை பக்தி போன்ற பக்திப் படங்களில் நடித்தவர், பிறகு இசையில் ஆர்வமாகி உதயனன் வாசவதத்தா, ரத்தக்கண்ணீர் ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். மேலும் விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம் ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக இருந்து இசையமைத்துள்ளார். அதன் பிறகு திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார்.

இவர் முதலில் பின்னணி பாடியது என்.எஸ்.கிருஷ்ன இயக்கிய ‘மணமகன்’ படத்தில். சி.ஆர்.சுப்பராமன் இசையில் வில் அம்பு பட்ட புண் என்கிற பாடல். இரண்டாவது பாடல் பராசக்தி படத்தில் கா... கா..கா, நெஞ்சு பொறுக்குதில்லையே, தேசம் ஞானம் கேள்வி என உடுமலை நாராயண கவி மூன்று பாடல்களை சுதர்சனம் இசையில் பாடினர். சிவாஜியின் பராசக்தி படத்தை தொடர்ந்து அடுத்து எம்.ஜி.ஆர். நடித்த அந்தமான் கைதி படத்தில் கோவிந்தராஜூலு இசையில் பாரதியின் காணி நிலம் வேண்டும் பாடலை எம்.எல்.வசந்த குமாரியுடனும், இன்பம் இல்லாத இல்லற வாழ்க்கை பாடலை கே.சார்ங்கபாணியுடனும் இணைந்து பாடினர். தொடர்ந்து பல இசையமைப்பாளர்கள், பல பாடகள், தனியாக என முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கும் சிதம்பரம் ஜெயராமன், கடைசியாக 1978-இல் சாரதா ஸ்டூடியோஸின்  ‘தர்மங்கள் சிரிக்கின்றன’ என்ற படத்தில் எம்.ஆர்.ராதாவுக்காக ‘போடா உலகத்தைத் தெரிஞ்சிக்க, புத்தியிருந்தா புரிஞ்சிக்க’ என்ற பாடல். 

சினிமா உலகில் சி.எஸ்.ஜெ. என்று அன்புடன் அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன், சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர். கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியவர். 

மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி,  டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார், சி.எஸ்.ஜெ.. குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். சி.எஸ்.ஜெ. பற்றிப் பல பிரபலங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பை ‘ஓர் அரிய இசைப் பயணம்’ என்னும் நூலாக சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரி வெளியிட்யிருக்கிறார். 

சிதம்பரத்தில் வசித்தபோது சிதம்பரம் ஜெயராமன் ஒரு பத்திரிகையை ஓராண்டு நடத்தினார். பத்திரிகையின் பெயர் ‘கலைஞன்’. அறிஞர் அண்ணாவின் ஆட்சியின் போது இவரை அரசு இசைக்கல்லூரியின் முதல்வராக நியமித்தார். 3 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். 

இவர் குரலின் சிறப்பைச் சொல்லும் சம்பவம் ஒன்று இவரின் இளம் வயதில் நடந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். ஒருமுறை கல்கத்தாவில் சூட்டிங். படப்பிடிப்பின் இடைவேளையில் சி.எஸ். ஜெயராமன் ஒரு மர நிழலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மாபெரும் ஆளுமை வருகிறார். ஆனால் அவர் யார் என்பது ஜெயராமனுக்குத் தெரியாது. வெண் தாடியோடு ஒளிபொருந்திய கண்களை உடைய அந்த முதியவர் ஜெயராமனிடம் வந்து, “ஒரு பாடல் பாடு” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

யார் என்று தெரியாத மனிதர் பாடச் சொல்கிறார். ஜெயராமனால் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் தேஜஸ் இருக்கிறது. உடனே பாடுகிறார். பாடி முடித்ததும் அந்த மனிதர் ஜெயராமனை தட்டிக்கொடுத்து, ‘தெய்விகக் குரல்’ என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டுச் சொன்றாராம். அவரின் தொடுதல் சி.எஸ். ஜெயராமனை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்த மனிதர் நகர்ந்துபோனதும் சுற்றுமுற்றும் இருந்தவர்கள் ஜெயராமனை நெருங்கி ‘அவர் யார் என்று தெரியுமா...’ என்று கேட்டார்கள். சி. எஸ். ஜெ தெரியாது என்று சொன்னார். அப்போது அவர்கள் சொன்னபதில் சி.எஸ். ஜெயராமனை மகிழ்ச்சியிலும் சிலிரிப்பிலும் ஆழ்த்தியது. அவர் வேறு யாருமல்ல... பாரத தேசத்தின் பெருமை ரவீந்திரநாத் தாகூர்.

1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அன்று இறந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக