வியாழன், 3 நவம்பர், 2022

தென்னிந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவாளர்?

தமிழ் சினிமா வரலாறு - 40

===================


தமிழின் முதல் மௌனப் படத்தை இயக்கிய ஆர்.நடராஜ முதலியார் கீழ்பக்கத்திலும், அதன் பிறகு தனது மகனுக்காக ஆர்.வெங்கையா நாயுடு புரசைவாக்கத்திலும் படம் எடுக்க ஸ்டுடியோக்களை கட்டினார்கள். தென்னிந்தியாவில் இப்படி விரல்விட்டு என்னைக் கூடிய அளவிலேயே ஸ்டுடியோக்கள் ஆரம்பத்தில் இருந்தன. சில பேர் பம்பாய்க்கும், சில பேர் கல்கத்தாவுக்கும் சென்றே தென்னிந்திய மொழிப படங்களை தயாரித்து வந்தனர். 

1931ஆம் ஆண்டு பேசும்படம் உருவான பிறகு, பேசும்படம் தயாரிக்க தொழில்நுட்ப வசதிகள் வட இந்தியாவில் இருந்ததால், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை தயாரிக்க நடிகர், நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு  பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும் சென்று கொண்டிருந்தனர். 

இந்த நிலையை போக்க எண்ணிய சிவகங்கை ஏ.நாராயணனின் என்கிற தயாரிப்பாளர், வெறும் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாமல் தந்தது மனையுடன் வெளிநாடு சென்று ஒலிப்பதிவு குறித்த தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதற்கான கருவிகளையும் வாங்கிக் கொண்டு சென்னை திரும்பியவர், 1934ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தென்னகத்தின் முதல் சவுண்டு ஸ்டுடியோவான சீனிவாஸ் சினிடோன் என்கிற ஸ்டுடியோவை தொடங்கினார். 

தென்னிந்திய மௌனப் படங்கள் தயாரிப்பு மந்தமாக இருந்த போது, இருபதுக்கும் மேற்பட்ட மௌனப் படங்களை எடுத்து பலருக்கு வாய்ப்பு கொடுத்து தென்னிந்திய சினிமா வளர்ச்சிக்கு எப்படி மௌனப் பட காலத்தில் காரணமாக இருந்தாரோ, அதே போல பாம்பாய்க்கும், கல்கத்தாவுக்கு பேசும் படம் தயாரிக்க அலைந்து கொண்டிருந்த தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை போக்க பெரிதும் உதவியாக, வழிகாட்டியாக அவரது சீனிவாஸ் சினிடோன் நிறுவனம் அமைந்தது. 

அந்த ஸ்டுடியோவில் முதல் படமாக அவர் இயக்கி தயாரித்த சீனிவாச கல்யாணம் என்கிற புராண படம் 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. பி.எஸ்.ஸ்ரீனிவாச ராவ், ஆர்.பி. லக்ஷ்மி தேவி, செருகளத்தூர் சாமா, பி.எஸ்.கமலவேணி, எம்.தி. பார்த்தசாரதி, நகைச்சுவை நடிகை அங்கமுத்து உட்பட பலர் நடித்த அந்தப் படத்தின் வசனம் மற்றும் பாடல்களை ராமானுஜ ஐயங்கார் எழுதினர். சி.ஆர்.எஸ். மூர்த்தி இசையமைத்த பாடல்களை மீனா நாராயணன் பதிவு செய்தார். ஏ.நாராயணனின் மனைவியான மீனா நாராயணன் ஒலிப்பதிவு... அதவாது சவுண்ட் ரெகார்ட் செய்தார். இதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் ஒலிப்பதிவாளர் என்கிற பெயரை பெற்றார், மீனா நாராயணன். 

படப்பிடிப்பின் போது நாடகத்திற்கு இசையமைப்பது போல இசையமைத்து வசனம் மற்றும் இசைப் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து கொண்டனர். படப்பிடிப்பில் இயற்கையில் எழும் சப்தங்களை தடுக்க... அதாவது காக்கா, குருவி கத்துக்க இல்லையா? அந்த ஒலி கேட்கக் கூடாது என்று அவற்றை ஓட்டவும், விரட்டவும், டைரக்டர் ஷாட் வைத்து  டேக் சொன்னது முதல் கட் சொல்வது வரை அமைதி ஏற்படுத்த ஸ்டுடியோவில் இரண்டுபேர் வேலைக்கு சேர்த்தார்கள். 

முன்பு இயக்குனர் மற்றும் கேமிரா உதவியாளருடன் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட படப்பிடிப்பு தளம், இப்போது ஒலிப்பதிவு கருவி, ஒலிப்பதிவாளர், இசைக்கருவிகள், வாசிப்பவர்கள், இசையமைப்பாளர், பாடலாசிரியர், படத்தின் உரையாடல் எழுதுவோர் என படைப்பாளிகள், படைப்பாளிகளுக்கு உதவுபவர்கள் என கூட்டம் அதிகமானது. 

இப்படி அதிகமான நபர்களுடன் உருவான சீனிவாச கல்யாணம் படம் தென்னிந்தியாவின் முதல் பேசும்படமாக 1934ஆம் ஆண்டு வெளியானது. பேசும் படம் 1931ஆம் ஆண்டே வெளிவந்தாலும், சென்னையில் தயாரான முதல்படம் இந்த  சீனிவாச கல்யாணம் படம் தான். அதனால், தென்னிந்திய திரையுலகை பொறுத்ததவரை 1934 ஆம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என்றே சொல்லாம். 

இந்த சவுண்ட் சிட்டி ஸ்டுடியோவைப் பார்த்து தான் பல ஸ்டுடியோக்கள் சென்னையிலும், சென்னைக்கு வெளியேவும் பிறகு உருவாகின. சினிமா நல்ல தொழில் என்று எல்லோரும் படையெடுக்க ஆரம்பித்தனர். அதுக்கு வித்திட்டது சவுண்ட் சிட்டியான சீனிவாசா சினிடோன் தானே?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக