வியாழன், 27 அக்டோபர், 2022

நடிகர் செருகளத்தூர் சாமா வரலாறு

நாற்பதுகள் வரையில், கடவுளர்களே தமிழ் சினிமாவில் முக்கியக் கதாபாத்திரங்கள். குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணரும் நாரதரும் இல்லாமல் எந்தப் படமும் சோபிக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் வேடத்துக்கு அங்கலட்சணம் மட்டுமல்ல; சங்கீத ஞானத்துடன் பாடி நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். என்.டி.ராமராவை 17 படங்களில் கிருஷ்ணராகப் பார்த்திருக்கிறோம். நரசிம்ம பாரதி கிருஷ்ணர் வேடத்துக்காகப் பிறந்த இன்னொரு நடிகர். இந்த இருவருக்கும் முன்னால், 40-களில் கிருஷ்ணர் வேடம் என்றால், அது கச்சிதமான தெய்வாம்சத்துடன் பொருந்தியது செருகளத்தூர் சாமாவுக்குத்தான். அவர் 11 படங்களில் கிருஷ்ணராக வாழ்ந்தார்.

ஏற்பது கடவுள் வேடம் என்றால் அதற்குரிய தெய்விகமும் சாந்தமும் சாமாவின் நடிப்பில் முழுமையாகக் குடிகொண்டுவிடும். மனிதக் கதாபாத்திரம் என்றால் அதன் குணத்துக்கு ஏற்ப நம் மனதைக் கொள்ளையடித்துவிடுவார். தஞ்சாவூர் மாவட்டம், குடவாசலை அடுத்த செருகளத்தூர் வைத்தியநாத ஐயரின் முதல் மகனாக 1904ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறந்தவர், சாமா. அவரது இயற்பெயர் சாமிநாதன். ஐந்தாவது வயதில் தாயார் இறந்து விடவே, தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய்மாமன் இவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அத்துடன் கருநாடக இசையையும் கற்றுக் கொண்டார். 

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்றதும் திருமணம் செய்து வைத்தார்கள். மூன்று பெண் பிள்ளைகள் பிறந்ததும் வருமானம் தேடும் பொருட்டு சென்னைக்கு வந்தார். இங்கு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது. இரண்டு மாதங்கள் அங்கு பணியாற்றினார். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் பாடக நடிகராகச் சேர்ந்துவிட முயன்றார். அது கைகூடவில்லை. 

பின்னர், நேசனல் மூவிடோன் ஸ்டூடியோவில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்த தன்னுடைய தூரத்து உறவினரான ராஜு மாமா என்பவரிடம் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் உதவியாளராக இருந்து ஒப்பனைக் கலையைக் கற்றுக்கொண்டார். அப்போது அங்கு உருவான வள்ளி கல்யாணம் படத்தில் நாரதராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பி.வி.ராவ் இயக்கிய அந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் அப்போது நூற்றி ஐம்பது ரூபாய். அதன் பிறகு, புதிய ஸ்டுடியோக்களின் வருகையால் நேஷனல் மூவிடோன் ஸ்டுடியோவை மூடிட்டாங்க. அதனால், மேக்-அப் வேலையை விட்டுவிட்டு நல்ல சம்பளத்துக்கு சென்னை காஸ்மோபொலிட்டன் கிளப்பில் கிடைத்த எழுத்தர் வேலைக்கு சேர்ந்தார். 

அந்தக் கிளப்புக்கு அவ்வப்போது வரும், தென்னிந்திய சினிமா தொழிலின் தந்தையான சிவகங்கை ஏ நாராயணன் அவர்களின் பழக்கம் கிடைக்க, சாமாவுக்கு கிடைத்தது. சாமாவின் அழகிய கையெழுத்தையும் ஒப்பனைக் கலை அறிவையும் தெரிந்து கொண்ட நாராயணன், தான் அடுத்து இயக்க இருந்த சீனிவாசா கல்யாணம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பினை வழங்கினார். 

சீனிவாசா கல்யாணம் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தில் நாரதராகவும் நடித்தார். மேலும் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த சீனிவாசராவுக்கு ஒப்பனை கலைஞராகவும் பணி செய்திருக்கிறார். 

அடுத்து ஆர்.பத்மநாபன் இயக்கிய மாயா பஜார் புராண படத்தில் வித்வான் சீனிவாசனுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஒய்.வி.ராவ் இயக்கிய பாமா பரிணயம் படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணர் வேடத்தில் டி.பி.ராஜலட்சுமியுடன் இணைந்து நடித்தார். அதற்கு காரணம், அவரை உதவியாளராக வேலை செய்ய வைத்து அவரது திறமையை அறிந்த ஏ.நாராயணனின் சிபாரிசுதான். 

சாமாவின் பாடும், நடிக்கும் திறமையைப் பார்த்து அசந்து போன ஒய்.வி.ராவ், தான் அடுத்து இயக்கிய ‘சிந்தாமணி’ படத்துக்கு இணை வசனம் எழுத வைத்ததுடன் அதில் வரும் கிருஷ்ணராக நடிக்கவும் வைத்தார். ‘சிந்தாணி’ படத்தில் மொத்தம் 26 பாடல்கள் படைத்திருந்தார், பாபநாசம் சிவம். அவற்றில் மூன்று பாடல்கள் பெரும் புகழ் பெற்ற பாடல்கள். கதாநாயகன் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி’, கதாநாயகி அஸ்வத்தம்மா பாடிய ‘ஈன ஜென்மம் எடுத்தேன் என் ஐயனே’. இந்த இரண்டு பாடல்களுக்கும் ஈடுகொடுத்த அந்த மூன்றாவது பாடல் ‘‘நாடகமே உலகம்.. நாளை நடப்பதை யாரறிவார்?’ இந்தப் பாடல் செருகளத்தூர் சாமா பாடி, நடித்த பாடல். ஒரு துணை நடிகருக்கு, கதாநாயகனுக்கு இணையாக தத்துவப் பாடல் கொடுக்கப்பட்டிருந்த ‘சிந்தாமணி’ படமும், செருகளத்தூர் சாமாவின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

‘சிந்தாமணி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோதே எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும் அவருடைய தந்தை மகாகவி கம்பராக செருகளத்தூர் சாமாவும் நடித்து வெளியானது ‘அம்பிகாபதி’. இந்தப் படமும் ஒரு வருடத்துக்கு மேல் ஓடி, சாதனை படைத்தது. அதேபோல், ராஜா சாண்டோ இயக்கத்தில், தியாகராஜ பாகவதர் அம்பலவாணராக நடித்த ‘திருநீலகண்டர்’  படத்தில், சிவபெருமானாகவும் சிவனடியாராகவும் இரண்டு தோற்றங்களில் வருவார் சாமா. தான் கொடுத்துவிட்டுச் செல்லும் கலயத்தை தொலைத்துவிடும் பாகவதரை மிரட்டு மிரட்டென்று மிரட்டி, நடிப்பில் அவரை நடுநடுங்க வைத்துவிடுவார் சாமா.

அடுத்து ஆர்.பிரகாசம் இயக்கிய கிருஷ்ணன் தூது படத்தில் கண்ணாம்பாவுடன் இணைந்து நடித்த சாமா, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த சகுந்தலை படத்தில் முக்கிய வேடமேற்றார். நடிப்பு, பாட்டுடன் தன்னுடைய எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பாமல், மூன்று படங்களை அடுத்தடுத்து தயாரித்து இயக்கினார் சாமா. 

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த பழமையான நேஷனல் மூவிடோன் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து, அதை ‘பாரத் மூவிடோன்’ என பெயர் மாற்றம் செய்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதிருந்த காதலால், அவருடைய ‘மெர்சென்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை, அதே கதாபாத்திரப் பெயர்களுடன் ‘ஷைலாக்' என்கிற பெயரில் தயாரித்து இயக்கி, வில்லன் கதாபாத்திரமான ஷைலாக்கினையும் அவரே ஏற்று நடித்தார். படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. 

அடுத்து சுபத்ரா அர்ஜூனா என்கிற படத்தை தயாரித்தார். அந்தப் படமும் நஷ்டத்தையே ஏற்படுத்தியது. மூன்றாவதாக ராஜசூயம் என்கிற படத்தை தயாரித்தார். அந்தப் படமும் தோல்வியை தர, படத் தயாரிப்பு நமக்கு சரிப்பட்டு வராது என்று பாரத் பிக்சர்ஸ் படக் கம்பனியை மூடி விட்டார்.

சின்ன வேஷம் போட்டு மேலே உயர்ந்தவர், கதாநாயகனாக நடித்து சொந்த படம் தயாரித்து நஷ்டம் ஏற்பட்டதால் அடுத்து அவரை கதாநாயகனாக நடிக்கவைக்க தயங்கினாங்க. ஆனால், இவர், கலைஞனாச்சே... சும்மா இருக்க முடியுமா?. காலம் பொன் போன்றது இல்லையா?. 

அதன் பிறகு பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி நடித்த மனோன்மணி படத்தில் ராஜகுருவாக நடிக்க வந்த வாய்ப்பை விடவில்லை. அதை ஏற்று நடித்தார். ஜெமினியின் ‘நந்தனார்’ படத்தில் ‘இசையரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகரை நந்தனாராகவும் செருகளத்தூர் சாமாவை வேதியராகவும் நடிக்க வைத்து இயக்கினார் பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆன முருகதாசா. அதில், சாமா, தஞ்சாவூர் பாணி மிராசுதாரராக மிடுக்கான நடிப்பைத் தந்து அசத்தியது படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

மீண்டும் தியாகராஜ பாகவதருடன் சிவகவி, கே.சுப்பிரமணியம் தயாரிப்பில் பர்த்ருஹரி, ஹொன்னப்ப பாகவதருடன் பர்மா ராணி, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா, சி.வி.ராமன் இயக்கிய ஆரவல்லி சூரவல்லி, தியாகராஜ பாகவதருடன் ராஜமுக்தி, வி.நாகையாவுடன் ஏழை படும் பாடு,  ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய விஜயகுமாரி, எம்.ஜி.ஆருடன் மர்மயோகி, என்.டி.ராமாராவுடன் பணம் படுத்தும் பாடு, ஜெமினி கணேசனுடன் மனிதன் மாறவில்லை, டி.எம்.சௌந்தராஜனுடன் பட்டினத்தார், எம்.என்.நம்பியாருடன் டாக்டர் சாவித்திரி, டி.ஆர்.மகாலிங்கத்துடன் மணிமேகலை போன்ற படங்களில் நடித்தவர், கடைசியாக எஸ்.பாலசந்தரின் ‘அவனா இவன்’ படத்தில் ஏழைத் தகப்பனாக நடித்திருந்தார். 

ஏழை படும் பாடு படத்தில் சாந்தமே உருவான சாமாவின் பாதிரியாரின் நடிப்பை பார்த்து பிரமித்து போன கவியோகி சுத்தானந்த பாரதியார், சாமாவுக்கு 'நடிகமணி' என்ற பட்டத்தை வழங்கி பாராட்டினார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்  'திரைஅரசன்' என்ற பட்டத்தை  வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக