வியாழன், 27 அக்டோபர், 2022

மக்கள் இசையை திரையில் தெறிக்கவிட்டவர் பி.எஸ்.சிவபாக்கியம்

தமிழ்த் திரையிசையின் தொடக்கம் என்பது கர்நாடக சங்கீதம் தழைத்து வளர்ந்த காலம். அன்றைய நடிகர்கள், நடிகைகள் பலர் முறையாக சங்கீதம் கற்றிருந்தனர். அவர்கள் பாடிய பாடல்கள் கிராமபோன் ரிக்கார்டாக வந்தது. ஆனால், 1932ம் ஆண்டு வெளியான ஒரு கிராமபோன் ரிக்கார்டு மிகப்பெரிய வரவேற்பையும், பெரும் சர்ச்சையையும் உருவாக்கியது. அது மக்கள் இசையாக வந்த முதல் கிராமபோன் ரிக்கார்டு என்றே சொல்லாம். 

வண்ணான் வந்தானே
வண்ணாரச் சின்னான்
வந்தானே
பின்னாலே வண்ணாத்தி
வந்தாளே...

என்ற அந்த ரிக்கார்டில் இருந்த  பாடல் தமிழகம் முழுவதும்  எதிரொலிக்க ஆரம்பித்தது. பாடலின் இடையே ‘ஹாங்... வண்ணான் வண்ணாத்தியை... ஹம்ங்...’ என்ற ஒலிக்குறிப்புகள் கர்நாடக இசைவிற்பன்னர்கள் மட்டுமின்றி சலவைத்தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பாடலுக்கு எதிராக 1936ம் ஆண்டு கும்பகோணத்தில் சலவைத்தொழிலாளர்கள், துணிகளை வெளுக்க மாட்டோம் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒரு பாடலுக்கு எதிராக நடைபெற்ற முதல் வேலைநிறுத்தப் போராட்டம் என்று வரலாற்றில் பதிவானதற்குக் காரணம்  ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா?. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் பி.எஸ்.சிவபாக்கியம். நாடக உலகில் மட்டுமின்றி சினிமா உலகிலும் தன் செல்வாக்கைச் செலுத்திய நடிகை. இவரது குடும்பமே கலைக்குடும்பம்தான்.

மதுரை சந்தான நாடக சபாவில் தனது நாடகப்பயணத்தை தொடங்கிய பி.எஸ்.சிவபாக்கியத்தின் அலட்டாத குரல், அவருக்கு பேரும், புகழையும் பெற்றுத்தந்தது. அவர் பாடும் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கித் தந்தது. அவர் குறத்தி, பால்காரி வேடங்களில் நாடகங்களில் தோன்றி பாடல்களைப் பாடினார்.

அவரது  அற்புதமான குரல் வளம் பாமர மக்கள் மத்தியில் மட்டுமின்றி பண்டிதர்கள் சிலர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. நாடகங்களில் பி.எஸ்.சிவபாக்கியம் பாடிய பாடல்களை ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர் மூலம் இசைத்தட்டுகளாக வெளியிட்டு வந்தார். இதன் மூலம் சட்டென வானில் வெள்ளி முளைப்பது போல, தமிழகம் முழுவதும் பி.எஸ்.சிவபாக்கியம் பிரபலமானவர்.  

நாடகத்தில் அவர் பாடிய ‘மதிச்சியத்தில குடியிருக்கிறது ஏ அம்மா...’ பாடலில் வார்த்தைகளுக்கு இடையே கொடுக்கும் ‘விக்கிறது...’ என்ற அழுத்தம்  பாடலின் கவர்ச்சியைக் கூட்டிக் கொடுத்தது.  இந்த பாடல், கிராமபோன் ரிக்கார்டில் சக்கைப் போடு போட்டதைப் பார்த்து 1934ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. 

நாடகங்களில் பாடிக் கொண்டிருந்த பி.எஸ்.சிவபாக்கியம்.... பாடல்கள் மூலம் மெல்ல மெல்ல திரையுலகில் பிரகாசிக்க ஆரம்பித்தார். அவர் பாடிய மற்றொரு மேடைப்பாடல் அவரை புகழ் ஏணியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

கூடை முறம்
கட்டுவோம்
குறி
சொல்லுவோம்

என குறிசொல்பவர்களைப் பற்றிய இந்த பாடலை பரமக்குடி பி.எஸ்.சிவபாக்கியம் பாடியதைக் கேட்கும் போது இவரது ஸ்டைலில்தான் பரவை முனியம்மா பாடியிருப்பார் என்று உணர முடியும். இந்தக் காலத்திலேயே பொதுவெளிக்கு வரும் பெண்கள் குறித்து எவ்வளவோ விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அந்தக் காலம் என்றால் சொல்லவும் வேண்டுமோ?

நாடக நடிகையாக இருந்து பாடகியாகி புகழ் பெற்ற பி.எஸ்.சிவபாக்கியம் சினிமாவிலும் தனது குரல் வளத்தால் கொண்டாடப்பட்டார். இன்றுவரை இரட்டை வேடம் என்றவுடன் பி.யூ.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திரன்’ படம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் முன்பாக 1934ம் ஆண்டு பி.வி.ராவ் இயக்கத்தில் வெளியான ‘பக்த துருவன்’ படத்தில் சத்தமில்லாமல் அந்த சாதனையையும் பி.எஸ்.சிவபாக்கியம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல் இரட்டை வேடம் போட்டவர் என்ற பெருமைதான் அது. அரசகுமாரியாகவும், குறத்தியாகவும் இப்படத்தில் சிவபாக்கியம் தோன்றினார். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நவீன வசதியும் இல்லாதபோதே ஒரே காட்சியில் இருவேடத்தில் அவர் திரையில் தோன்றிய காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பத்திரிகைகள் ஆச்சரியப்பட்டு எழுதின. 

இந்த படத்தில் -

பச்சை சிகப்பு
மிச்சம்
கருப்புப்
பாசியிருக்குது
பாசி கோர்க்கும்
ஊசி இருக்குது
நரிக்கொம்பிருக்குது
பெரிய வரிப்புலி
நகமிருக்குது
நம்ம புள்ளைக்கு
வாங்கிப் போட்டா
நல்லாருக்குமே...

என்ற பாடலை சிவபாக்கியம் பாடி அசத்தினார். ‘பச்சை குத்த ஆசை உமக்கில்லீங்களா...’ என்ற பாடலையும் அவர் பாடினார்.  

‘திரௌபதி வஸ்திராபகரணம்’, ‘நல்லதங்காள்’, ‘பீஷ்மா’, ‘லீலாவதி சுலோசனா’, ‘மிஸ் சுந்தரி’, ‘பாண்டுரங்கன்’, ‘பக்த கௌரி’, ‘அருந்ததி’, ‘திவான் பகதூர்’, ‘ஆரவல்லி சூரவல்லி’, ‘போஜன்’, ‘ஞானசௌந்தரி’, ‘திருமழிசை ஆழ்வார்’, ‘மாமியார்’... உள்ளிட்ட பல படங்களில் பி.எஸ்.சிவபாக்கியம் நடித்தார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லி என கொடுத்த கேரக்டர்களை அவர் நிறைவாகவே செய்தார்.

1937ம் ஆண்டு ஸ்டண்ட் நடிகர் பாட்லிங் மணியுடன் நகைச்சுவைக் காட்சிகளில் பி.எஸ்.சிவபாக்கியம் இணைந்து நடித்திருந்தார்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் அதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த டி.ஏ.மதுரம் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த படம் ‘பாண்டுரங்கன் அல்லது ஜெய் ஜெய் விட்டல்’. 1939ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து உச்சஸ்தாயியில் தொடங்கும் -

ஆருயிரே அமுதே என்
கார்குழலே கனியே
நாரியர் மாமணி
நாணமு மேனடி
மார மனோ கரனே  
நான் கோரிய
நாயகனே சுகுணனே
கோதையர் மோகனே
கோமள தேகனே...

என்ற பாடலை  பாடியுள்ளார். 

1941ம் ஆண்டு வெளியான படம் ‘பக்த கௌரி’ படத்தில்  கொடுமைக்கார மாமியாராக நடித்த பி.எஸ்.சிவபாக்கியம், ‘என்ன சொல்வேன் நான் அந்தப் பேயாண்டியை...’, ‘காணேன் காணேன் காணேன்...’ என்ற இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். 

பி.எஸ்.சிவபாக்கியத்தின் சகோதரர், பி.எஸ்.ராஜமாணிக்கம் என்ற நாடக நடிகர் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போதும் பாடல்கள் மூலம் தனது குரல் வளத்தால் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பிஸ்.சிவபாக்கியம் அம்மாள் கார் விபத்து ஒன்று அவரை நம்மிடம் இருந்து காலம் பிரித்துவிட்டது. 

நடிப்பின் மீது மட்டுமின்றி பெண்கள் மீது மிகுந்த கரிசனம் கொண்டவராகவே வாழ்ந்திருக்கிறார் சிவபாக்கியம். தான், சினிமாவில் நடித்து சேர்த்து வைத்த சொத்தைக் கொண்டு பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில்  மிகப்பெரிய பங்களாவை அவர் கட்டினார்.  பரமக்குடியில் பெண்கள் மருத்துவமனை நிறுவ இடம் வேண்டும் என்று கேட்டபோது பி.எஸ்.சிவபாக்கியம், தான் வாழ்ந்த பங்களாவை இலவசமாக வழங்கினார். இன்று சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் இடத்தை 70 ஆண்டுகளுக்கு முன்பே அள்ளித்தந்த வள்ளல் பி.எஸ்.சிவபாக்கியம். 

பரமக்குடி என்றவுடன் கமல்ஹாசனின் பெயர் இன்று உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம். ஆனால்,  தமிழ் சினிமாவிற்கு முதல் முதல் பரமக்குடியில் இருந்து வந்தவர் என்ற பெயர் சிவபாக்கியத்திற்குத்தான் உண்டு என்கிறார், கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக