திங்கள், 24 அக்டோபர், 2022

நடிகர் மகாராஜபுரம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரலாறு

இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள இருக்கும் கலைஞர் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி என அழைக்கப்படும் மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு பழம்பெரும் நடிகரும் பாடகரும் ஆவார்.  பல தமிழ்ப் படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் பழம்பெரும் கர்நாடக சங்கீதப் பாடகர்.. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரின் புதல்வர்.... அனைவரும் அறிந்த பாடகர் மகாராஜபுரம் சந்தானம்.... இவரின் அண்ணன்....  

சினிமா டாக்கீஸ் தோன்றிய ஆரம்ப நாட்களின் தனிப்பெரும் கதாநாயகர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு மற்றும் பாடுவதில் பெரிய கெட்டிக்காரர். தியாகராஜ பாகவதருக்கு முன்னவர்.  இவர் முதன் முதலில் நடித்தப் படம் 1933 ஆம் ஆண்டு வெளியான சத்தியவான் சாவித்திரி. இந்தப் படத்தில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் டி.பி.ராஜலட்சுமி, டி.எஸ்.மணி உட்பட பலர் நடிக்க அந்தப் படத்தை கலக்கத்தாவை சேர்ந்த மதன் தயாரித்தார். அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு பாமா விஜயம் என்கிற படத்தில் கிருஷ்ணராகத் தோன்றி நடித்திருந்தார்.  இந்தப் படத்தில் அவருடன் பி.எஸ்.ரத்னாபாய், ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடிக்க மாணிக் லால் டாண்டன் இயக்கினார். ஏ.என்.மருதாலசலம் செட்டியார் தயாரித்த அந்தப் படத்திற்கு கே.தியாகராஜ தேசிகர் இசையமைத்தார். Pioneer Films சார்பில் ஐம்பதாயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு லட்சம் வசூல் செய்து பாராட்டை பெற்றது. 

1935 ஆம் ஆண்டு டம்பாச்சாரி படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் அவருடன் பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் நடிக்க, எம்.எல்.டாண்டன் இயக்கினார்.  அடுத்து அதே ஆன்டில்வெளியான ரத்னாவளி படத்தில் நடித்தார். ஹர்ஷவர்தனர் எழுதிய ரத்னாவளி என்ற காப்பியத்தை அடிப்படையாக வைத்து பம்மல் சம்பந்த முதலியார் அதற்கு திரைக்கதை எழுத ப்ரஃபுல்லா கோஷ் இயக்கினார். 

இதில் கௌசாம்பி நாட்டு மன்னனாக எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிக்க, இலங்கையின் இளவரசி ரத்னாவளியாக பி. எஸ். ரத்னாபாய் நடித்தார். இன்னொரு நாயகியாக பி.எஸ்.சரஸ்வதிபாய் நடித்தார். 

நாடகங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்த பி.எஸ். ரத்னாபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் ஆகிய இரு சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்தனர். நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டையைச் சேர்ந்த இவர்களின் பாடல்கள் கிராமபோன் இசைதட்டுகளில் அந்த காலத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்தப் படத்திலும் மதலைகள் உருக் கொண்ட என்கிற பாடலை பி. எஸ். இரத்தினாபாய் பாடி இருந்தார். அதே போல கதாநாயகனாக நடித்த எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, கடலுக்கு உவமை கடலே என்கிற பாடலை பாடி இருந்தார். ஐநூறு படங்களுக்கு மேல் சாதனை படைத்த இசை சக்கரவர்த்தி பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதிய முதலாவது திரைப்படம் இதுவாகும். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கல்கத்தாவில் நடிப்பெற்றது. சரஸ்வதி டாக்கீஸ் சார்பில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரித்த இந்தப் படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், நகைச்சுவைக் காட்சிகளுக்காக வரவேற்பைப் பெற்றது. ‘தென்னாட்டுச் சார்லி சாப்ளின்’ எனப் போற்றப்பட்ட சி. எஸ். சாமண்ணா, சுப்பிரமணிய முதலியார், கே. எஸ். அங்கமுத்து, பபூன் சண்முகம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர். 

அதன் பிறகு 1936 ஆம் ஆண்டு சீமந்தினி, பாதுகா பட்டாபிஷேகம் ஆகிய படங்களில் நடித்தார். 1938 ஆம் ஆண்டு வெளியான நந்தகுமார் படத்தில் TR.மகாலிங்கம், ராஜலட்சுமி ஆகியோருடன் நாராயணாராவ் டி.சர்போர்டார் இயக்கத்தில், எஸ்.ஏ.வெங்கடராமன் இசையில் நடித்தார். 

1939 ஆண்டு வெளியான மாயா மச்சீந்திரா, பாண்டுரங்கன் ஆகிய படங்களில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடித்தார். பாண்டுரங்கன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் T.A.மதுரம். அந்தப் படத்தை டி.சி.குனே இயக்கினார். 

அடுத்து 1940 ஆம் ஆண்டு வெளியான பரசுராமர் படத்தில் நடித்தார். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா நாயகனாக நடிக்க டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். ஏஞ்சல் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.  

ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த  மீனாட்சி கல்யாணம் படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்னம், டி.பிரேமாவதி உட்பட பலரும் நடித்திருந்தனர். ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி தயாரித்த இந்தப் படம் இயக்குனர் ஆர்.பத்மனாபனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.  

அடுத்து அவர் நடித்த படம், கிராதா அர்ச்சுனா. பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கும் வேடனாக வடிவெடுத்து வந்த சிவனுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதையை என். ஆர். தேசாய் எழுத ஜி. ராமகேசன், முத்துசுவாமி ஐயர் இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். பவானி கே. சாம்பமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தை வீனஸ் பிக்சர்ஸ் என்கிற பழைய பட நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 

இந்தப் படத்திற்கு கிராதா அர்ச்சுனா எனவும் ஊர்வசி சாகசம் எனவும் இரண்டு பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. 1939 ஆம் ஆண்டிலேயே தணிக்கை செய்யப்பட்டு, வெளியிடத் தயாராக இருந்தும், ஏதோ காரணங்களால் தடைபட்டு 1940 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் 
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி அர்ச்சுனனாக நடித்தார். அவருடன் பி.பி. ரெங்காச்சாரி, திருக்கரைவாசல் சுப்புலட்சுமி, பவானி கே. சாம்பமூர்த்தி, டி. எம். ராமசாமி பிள்ளை, எம். வி. சுலோச்சனா, எம். எஸ். மணி, டி. வி. லட்சுமி என பலர் நடித்துள்ளனர். 


1941 ஆம் ஆண்டு வேதவதி அல்லது சீதா ஜனனம் படம். வேதவதி படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கினார். இந்தப் படத்தில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன், ஆர்.பாலசுப்ரமணியம், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பி.எஸ்.வீரப்பன், கே.தவமணி தேவி, குமாரி ருக்மணி, கோலார் ராஜம், எம்.எஸ்.சுந்தராம்பாள் உட்பட பலரும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர். இந்தப் படத்தில் இந்திரஜித் வேடத்தில் நடித்திருந்தார்.

சியாமளா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராஜா சந்திரசேகர் தயாரித்த இந்தப் படத்தில் டி.கே. ஜெயராமன் இசையில் உருவான பாடல்களை  பாபநாசம் சிவன், பி.ஆர். ராஜகோபால ஐயர் இருவரும் எழுதி இருந்தனர். இந்தப் படத்திற்கு டி.இ. கூப்பர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக