வியாழன், 27 அக்டோபர், 2022

இசையால் கவர்ந்த ஜி.என்.பாலசுப்பிரமணியம்

மௌனப் படங்கள் வெளிவந்த போது அதை பார்க்கவும், நடிக்கவும் நாடக நடிகர்களே பலர் விரும்பியதில்லை. காரணம் தங்களது குரல் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பில்லையே என்று ஒதுக்கினார்கள். அவர்களைவிட மேட்டுக்கு குடியினர்... அதாவது ரொம்ப வசதியானவர்கள் எல்லாம் சினிமாவை கண்டுகொள்ளவே இல்லை. எல்லோருக்கும் அப்போது நாடகம் மட்டுமே பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது.  பேசும் படம் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தாங்கள் நடித்த நாடகத்தை அப்படியே எடுக்கிறார்கள். நல்ல வருமானமும் வருகிறது என்றதும்.... நாடக நடிகர்களும், இசை விற்பன்னர்களும் தங்களது திறமையை சினிமாவில் வெளிக்காட்ட ஸ்டுடியோக்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதில் இசைத்திறமையால் பாடுபவர்களுக்கு... பாடலால் புகழ்பெற்றவர்களுக்கு சினிமாவில் உடனே வாய்ப்பு கிடைத்தது. 

1934 ஆம் ஆண்டு வெளிவந்த பாமா விஜயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கருநாடக இசைக்கலைஞர் ஜி.என்.பாலசுப்பிரமணியன். இசை வித்வான்னு சொல்வாங்கள்ல... அவர்தான் இவரு.... 

இந்த ஜி.என்.பாலசுப்பிரமணியம் 1910 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே உள்ள கூடலூர் என்கிற ஊரில் ஜி.வி.நாராயணசாமி ஐயர், விசாலம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கிராமத்தில் பிறந்தாலும் நகரத்தில் வளர்கிற வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. அதுக்கு காரணம் அவருடைய அப்பா நாராயணசாமி ஐயருக்கு சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை. அதனால் குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது. 

நாராயணசாமி ஐயர்  நல்ல தலைமை ஆசிரியர் மட்டுமல்ல, சிறந்த இசை ரசிகரும் கூட.... அதனால், இசைக்க கலைஞர்களை அழைத்து வந்து பாட வைக்க ஒரு சபையை ஏற்பாடு செய்தார். அந்த சபை சார்பில் நடக்கும் கச்சேரிகளுக்கு தனது குடும்பத்தினரையும் அழைத்து செல்வார். அதனால் சிறு வயதிலிருந்தே ஜி.என்.பாலசுப்பிரமணியத்திற்கும் பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் பழகி அவர்களின் இசையை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

சிறுவயதில் கேள்வி ஞானத்திலேயே பல கீர்த்தனைகளைச் சிறப்பாகப் பாடுவாராம், பாலசுப்பிரமணியம். மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம் இருந்தாலும், நண்பர்களது ஆலோசனையின் பேரில், மதுரை சுப்பிரமணிய ஐயரிடம் மகன் பாலசுப்பிரமணியத்தை இசை கற்க ஏற்பாடு செய்தார், அவரது தந்தை, நாராயணசாமி ஐயர்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம், சென்னை பல்கலைக்கழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் வாங்கின பாலசுப்பிரமணியம் தொழில்முறை இசைக் கலைஞராக அவர் மாறியது தற்செயலான நிகழ்வு. ஆமாம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 1928-ல் ஒருமுறை முசிறி சுப்பிரமணிய ஐயர் பாடுவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக அவரால் வர முடியவில்லை. அவருக்குப் பதிலாக இவரைப் பாட அழைத்தார்கள். இவரது அசாதாரண குரல் வளம், அதிரடி ஸ்வரக் கோர்வை, ஆழ்ந்த இசை ஞானம் ரசிகர்களைப் பிரமிக்கவைத்தது.

முறையாக முதல் கச்சேரி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என பெரிய வளர்ச்சி... பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றார். இவர் பாடிய பாடல்கள் இசை தட்டுகள் மூலம் விற்பனை ஆகி வசூலில் சாதனை படைத்தது. 

திறமையானவர்களை கண்டால் சினிமாகார்கள் விடுவார்களா... அல்லது திறமை உள்ளவர்கள் சினிமாவைதான் விடுவார்களா... எப்படியோ... 

வங்காள இயக்குனர் மாணிக் லால் டாண்டன் தமிழில் பாமா விஜயம் படத்தை தொடங்கிய போது அதில் கதாநாயனாக நாரதர் வேடத்தில் ஜி.என்.பாலசுப்பிரமணியத்தை நடிக்க வைத்தார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பாலசுப்பிரமணியத்தின் பெயர் "ஹட்சின்ஸ் பிளேட் ஃபேம் சங்கீதா வித்வான்" என்று தோன்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

பாமா விஜயம் படத்துக்கு கே. தியாகராஜ தேசிகர் இசை அமைத்திருந்தார். அதில் மொத்தம் 59 பாடல்கள். அதில் 10 பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடி இருந்தார். பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "பாலகனகமையா" எனத் தொடங்கும் தியாகராஜர் கீர்த்தனை.  இந்தப் படத்துல இன்னொரு விஷேசம் என்னன்னா... படத்தின் முடிவில், இதில் நடித்த அனைவரும் சேர்ந்து பாடிய ஜன கண மன பாடல் காட்சி காண்பிக்கப்பட்டது. முதன்முறையாக, இந்திய நாட்டுப்பண் ஐ திரையில் காட்சிப்படுத்திய முதல் படம் என்றே சொல்லலாம். 

இந்தப் படத்தை தொடர்ந்து 1937 ஆம் ஆண்டு வெளிவந்த சதி அனுசுயா புராண படத்தில் நடித்தார். பிரிமியர் சினிடோன் பட நிறுவனம் தயாரித்து பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியத்துடன் எம். வி. மணி, ராமகோடி சுவாமிகள்,
வித்வான் கோவிந்தராயுலு, டி. வி. ஞானலட்சுமி, ஆர். சகுந்தா பாய் என நிறைய பேர் நடிச்சிருந்தாங்க... 

அடுத்து எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சகுந்தலை படத்தில் நடித்தார், பாலசுப்பிரமணியம்.  எல்லிஸ் டங்கனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசன் இயற்றிய சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் இப்படத்தில் துறையூர் ராஜகோபால சர்மா இசையில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் நான்கு பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடி இருந்தார். "எனை மறந்தனன்” என்று தொடங்கும் விருத்தத்தில் காம்போதி ராகத்தில் வேறு ஒருவருமே கையாண்டிராத வகையில் இரண்டு நிமிடத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் அந்த ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் குழைத்து பாடியுள்ளார். 
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம் தயாரித்த இந்தப் படம் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. 

அதன் பிறகு 1947-ல் வெளிவந்த உதயணன் வாசவதத்தா என்கிற படத்தில் உதயணனாக நடித்தார். வாசவதத்தா வசுந்தரா தேவி நடித்தார். டி. ஆர். ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் பாலசுப்பிரமணியம், வசுந்தராதேவி இருவருமே சி.ஆர்.சுப்பராமன் இசையில் பாடல்கள் பாடியுள்ளனர். படத்தில் இருவரும் நடனக் காட்சிகளில் மிக சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர். அதற்கு நடனம் ஆசிரியர் வி. பி. ராமையா பிள்ளை மற்றும் காமினி குமார் சின்ஹா இருவரும் பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள். 

முதலில் இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதர் உதயணன் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து ஒரு சில காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட்டது. பின்னர் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, காரணமாக கைவிடப்பட்டார். அவருக்கு பதிலாக ஜி.என். பாலசுப்பிரமணியம் நடித்தார்.

உதயணன் வாசவதத்தா படத்திற்கு பிறகு ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்த படம், ருக்மாங்கதன். 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ருக்மாங்கதன் படத்தை பி. எஸ். வி. ஐயர் இயக்கினார். இந்தப் படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன், பி.ஏ.பெரியநாயகி, சி. டி. ராஜகாந்தம் என பலரும் நடித்திருந்தனர். பாடல்களை பாபநாசம் சிவன் எழுத ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். 

அந்த காலகட்டத்தில் இசைத் தட்டுகளுக்குப் பாட சில கலைஞர்கள் தயங்கினர். இவரோ ஹட்சின்ஸ் கிராமபோன் பிளேட் புகழ் வித்வான் ஆனார். அவர் பாடி இசைத் தட்டாக வெளிவந்த "வாசுதேவயனி" என்று தொடங்கும் கல்யாணி இராகப் பாடல் அக்காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. அது பதிப்பிக்கப்பட்ட 1940 ஆம் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் "ராயல்டி"யாக அவருக்கு இந்த இசைத்தட்டு விற்பனை மூலம் கிடைத்தது. விற்பனையிலும் சாதனை படைத்தது.

பாலசுப்பிரமணியம் ராக ஆலாபனையில் புதிய முறைகளைக் கையாண்டார். பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் 250 பாடல்களை இயற்றியுள்ளார். அவை தொகுக்கப்பட்டு 2 நூல்களாக வெளிவந்தன.

இசைக் கச்சேரிகளில் தற்போது பின்பற்றப்படும் பாணியை வகுத்துக்கொடுத்து, செம்மைப்படுத்தியது இவர்தான். இது ‘ஜிஎன்பி’ பாணி என சொல்வார்கள். இவருடைய மாணவர்களில் எம். எல். வசந்தகுமாரி, ராதா ஜெயலட்சுமி, எஸ். கல்யாணராமன், திருச்சூர் வி. இராமச்சந்திரன்,டி.ஆர்.பாலு, டி.எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் ராகினி ஆகியோர் சிறந்த பாடகர்களாகப் புகழ் பெற்றவர்கள். 

சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கர்னாடக இசைப் பிரிவின் இணை இயக்குநராக நீண்டகாலம் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் முதல்வராக சேர்ந்தார். இசை உலகத்தை ஒரு ஆபத்தான காடு என்று விவரித்தவர், தனது மகன்கள் மற்றும் மகள்கள் அதை கற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்தினார். 

தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஈர்த்த பாலசுப்பிரமணியம் பக்கவாத நோய்க்கு ஆளாகி சில காலம் அவற்றுடன் போராடி, 1965 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி பக்கவாத நோயிடமிருந்தும், இந்த உலகிடமிருந்தும் தனது ஜபத்தி ஐந்தாவது வயதில் விடைபெற்றார். 

தனது இசை அறிவால் புகழின் உச்சிக்கு சென்று பல ஆண்டுகள் கருநாடக இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஜி.என்.பி. என்று அழைக்கப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும், அவர் தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது நமக்கு பெருமையே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக