இந்த பகுதில் நாம் பார்க்க இருக்கும் கலைஞர் தமிழில் அறிமுகமான ஒரு கன்னட நடிகர் பற்றித்தான். ஆமாம். இந்தியில் புகழ்பெற்ற முதல் தமிழ் நடிகர் ராஜா சாண்டோ அவர்களை பற்றி சென்ற பகுதிகளில் தெரிந்து கொண்டோம் அல்லவா. அவர் நடிகராக மட்டும் அல்லாமல் இந்தியிலும், தமிழிலும் பல படங்களை இயக்கியவர். அதில் அவர் இயக்கிய படங்களில் 1932 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாத புஷ்பஹரணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், கன்னட நடிகரான நாகேந்திர ராவ். அவர் பிறகு ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர்.
அந்த நாகேந்திர ராவ் 1896 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் மைசூர் இராச்சியத்தில் உள்ள ஹோல்கெரேவில் பிறந்தவர். தமிழில் ஒரு பாடல் இருக்குல்ல... நான் ஏழு வயசுல எழனி வித்தவ... பத்து வயசுல பதனி வித்தவன்னு... அது மாதிரி நாகேந்திர ராவும் தன்னோட எட்டு வயதில் கன்னட மொழியில் எழுதப்பட்ட நாடகங்களில் நடித்து, நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
சிறுவயதில், சீதை போன்ற தெய்வீகப் பெண் கதாபாத்திரங்களையும், சந்திரமதி போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த அவர், பிறகுதான் ஆண் வேடங்களுக்கு மாறினார், ஏ.வி. வரதாச்சார்யாவின் ரத்னாவளி நாடக நிறுவனம், மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி நாடக நிறுவனத்திலும் நடித்துக் கொண்டிருந்தார்.
1931 இல் இந்தியாவில் பேசப்படும் திரைப்படங்களின் சகாப்தம் தொடங்கியவுடன், நாகேந்திர ராவும் பம்பாய்க்கு புறப்பட்டார். அங்கு, பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய பாரிஜாத புஷ்பஹரணம் படத்தில் நாரதராக நடித்தார். 1932ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன் பிறகு 1933ஆம் ஆண்டு கோவலன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். தெலுங்கு மொழியில் உருவான ராமதாசு படத்திலும் நடித்தவர், அந்த மூன்று படங்கள் கொடுத்த அனுபவம் அவருக்கு கன்னடத்தில் படம் தயாரிக்க வேண்டும். கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
உடனே மும்பையில் இருந்து பெங்களூருக்குத் திரும்பியவர், கன்னட சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகரும், இயக்குநருமான சுப்பையா நாயுடுவுடன் இணைந்து ஸ்ரீ சாஹித்ய சாம்ராஜ்ய நாடக நிறுவனம் என்கிற அமைப்பை நிறுவினார். கன்னடத்தில் ஒரு திரைப்படம் என்ற தனது கனவை நனவாக்க கதை எழுதி முடித்ததும், பெங்களூரு தொழிலதிபரான ஷா சமன்லால் டூங்காஜியை நிதியுதவி செய்ய அணுகினார். படத்தை இயக்குவதற்கு ஒய்.வி.ராவ் என்கிற யாரகுடிபதி வரத ராவ் என்பவரை தேர்வு செய்தார். இவர் பல மௌனப் படங்களில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர். சில மௌனப்படங்ககளை இயக்கியவர்.
ராமாயணத்தில் வரும் சுலோச்சனா என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 'சதி சுலோச்சனா' என்கிற கதையை உருவாக்கி, அதில் இந்திரஜித்தாக சுப்பையா நாயுடு, சுலோச்சனாவாக திரிபுரம்பா, மண்டோதரியாக லக்ஷ்மி பாய், லட்சுமணனாக இயக்குனர் ஒய்.வி.ராவ் நடிக்க, ராவணனாக நடித்து படத்துக்கு இசையும் அமைத்தார் ஆர்.நாகேந்திர ராவ்.
இந்திய சினிமா.... இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெடித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1934 ஆம் ஆண்டில் முதன் முதலாக கன்னடம் பேசியது. கன்னடத்தில் முதல் பேசும் படமான சதி சுலோச்சனா பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து தமிழில் நவீன சுதந்திரம், தெலுங்கு மொழியில் பூகைலாஷ் ஆகிய படங்களில் நடித்தவர், மீண்டும் கதை எழுதி வசந்த சேனா என்கிற கன்னடப் படத்தை தயாரித்து சக்ரா என்கிற துணைப் பாத்திரத்தில் நடித்தவர், அடுத்து கதை எழுதி சத்ய ஹரிச்சந்திரா என்கிற படத்தாய் இயக்கி தயாரித்தார். அதில் விஸ்வாமித்ரராகவும் நடித்தார்.
அதன் பிறகு மகாத்மா கபீர் என்கிற படத்தை கன்னடத்தில் இயக்கி நடித்தவர், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான அபூர்வ சகோதர்கள் படத்தில் பானுமதி, எம்.கே.ராதாவுடன் இனைந்து நடித்தார். அதன் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த மூன்று பிள்ளைகள் படத்தை இயக்கி நடித்த ராவ், நடிகை பானுமதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இயக்கிய சந்திராணி படத்தில் நடித்தார்.
ராவ், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரித்து, இயக்கி நடித்த பிரேம புத்ரி படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து. மேலும் 5வது தேசிய திரைப்பட விருதுகளில், இந்த திரைப்படம் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. மேலும் ஆறு கன்னடப் படங்களை இயக்கி, நடித்துள்ள ராவ், அண்ணன், மற்றும் தந்தை வேடங்களில் 33 கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.
ராவின் நாடகமான புகைலாசா மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டது. 1938 மற்றும் 1940 ல் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி, மற்றும் 1958 ல் இயக்குனர் கே. சங்கர் எடுத்துள்ளனர். இந்த நாடகத்தில்தான் கன்னட சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜ்குமார், நாடக நடிகராக தனது திருப்புமுனையை நாரதா வேடத்தில் நடித்தார்.
ராஜ்குமாருடன் ராவ் இணைந்து நடித்த அவரது திரைப்படமான Hannele Chiguridaga படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. அதில் அவர் நடித்த ஆனந்த ராவ் பாத்திரத்திற்காக, அவர் சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை பெற்றார். சினிமாவுக்கு ராவ் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஆர்.நாகேந்திர ராவுக்கு ரத்னா பாய், கமலா பாய் என இரு மனைவிகள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் மூன்று பேர் திரைப்படத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது இரண்டாவது மகன், R. N. K. பிரசாத், ஒளிப்பதிவாளர், அவரது மூன்றாவது மகன், R. N. ஜெயகோபால், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் மற்றும் அவரது இளைய கமகன், R. N. சுதர்சன், ஒரு நடிகர்.
1932 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த நாகேந்திரராவ், 1974 ஆம் ஆண்டுவரை நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் ப்ரொஃபசர் ஹுச்சுரயா. 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி தனது 80வைத்து வயதில் மறைந்தார்.
அதிக கன்னட படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், தமிழ் கலைஞர்களின் படங்களில் நடித்து கன்னட சினிமா தொடங்க வேண்டும் என்று பெரும் கனவு கண்டு அதை நிறைவேற்றிய சாதனையாளர், ஆர்.நாகேந்திரராவ். இவர் சில தமிழ் படங்களில் நடித்து, சில தமிழ் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னோடியும் கூட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக