செவ்வாய், 25 அக்டோபர், 2022

பாளையங்கோட்டை சகோதரிகள்

பாளையங்கோட்டை சகோதரிகள்


இன்னைக்கு இந்த பகுதில் நாம பேச இருக்கும் அல்லது தெரிந்து கொள்ள இருக்கும் தகவல் பாளையங்கோட்டை சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய் சகோதரிகள் பற்றித்தான். இவுங்க யாருன்னா.... பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் இருவருமே இரட்டை பிறவிகள். இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். இருந்தாலும், தமிழின் மீதும் இசையின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ரத்னா பாய் இசையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். சரஸ்வதிபாய் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். 

அன்று நாடக மேடைகளில் இருவரும் ஒன்றாகவே பயணம் செய்துள்ளார்கள். ரத்னா பாய் நாடகங்களில் நடிப்பதுடன் ஆர்மோனியம் வாசிபதிலும் கெட்டிக்காரர். சரஸ்வதி பாய் நன்றாக பாடுவதுடன் நடிப்பிலும் அசத்துவார். இருவரும் பெருங்குரலெடுத்து  மேடையில் பாடி நடித்தால் மொத்த பார்வையாளர்களும் மெய்மறந்து பார்ப்பார்கள். அந்த காலத்தில் இவர்கள் நாடகத்தில் பாடிய பாடல்களை பதிவு செய்து கிராமபோன் தட்டுக்கள் மூலம் வெளியிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்கள் இருவரும் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்றால், தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்கரவர்த்தினி, கோகில கான வாணி என்று விளம்பரம் செய்வார்கள். அந்தளவுக்கு சங்கீத திலமாக பெயர் பெற்றிருந்தனர்.

அந்த காலத்தில் தியேட்டர்களில் மௌன படம் திரையிடும்போது பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ரசிகர்களை கவர்வதற்காக நடத்தப்படும் அந்த நிகழ்ச்சியில் பிரபல கலைஞர்கள் பங்கேற்பார்கள். மௌன படம் பார்க்க வருபவர்கள் இந்த நிகழ்ச்சிக்காகவும் வருவார்கள் என்கிற நம்பிக்கை.

அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ரத்னா பாய் சகோதரிகளின் பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது உண்டு. ரத்னா பாய் சகோதரிகள் வருகிறார்கள் என்று விளம்பரம் செய்தால் அன்று அவர்கள் பாட்டை கேட்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடுமாம்... பாருங்க மௌனப் படத்தை ஓட வைப்பதற்காக கூட ரத்னா பாய் சகோதரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.... மௌன படத்திற்குப் பிறகு பேசும் படம் வந்தது.... ரத்னா பாய் சகோதரிகளின் திறமையை அறிந்தவர்கள் விடுவார்களா.....

அமெரிக்காவில் சினிமாவை கற்றுக் கொண்ட மாணிக் லால் டாண்டன் என்கிற வங்காள இயக்குனர் தமிழிலில் பேசும் படம் இயக்க முடிவு செய்த போது, அவர்  கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி நாரதர் வேடத்தில் நடிக்க வைத்தார். இதில் பி. எஸ். ரத்னாபாய் - ச‌‌த்‌தியபாமா‌வாக, பி. எஸ். சரஸ்வதி பாய் - ருக்மணியாக நடிக்க வைத்தார். பாமா விஜயம் என்கிற பெயரில் உருவான அந்தப் படத்தை செல்லம் டாக்கீஸ் படநிறுவனம் சார்பில் மருத்தப்ப செட்டியார் தயாரித்தார். 

இதில் கே. தியாகராஜ தேசிகர் இசையில், 10 பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக நடித்த  எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி சில பாடல்கள் பாடியதுடன், பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து இரு பாடல்கள் பாடியுள்ளார். இந்தப் படத்தில் ரத்னா பாய் சகோதரிகளும் பாடியுள்ளனர். ஐம்பது ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பாமாவிஜயம் படம் 1934 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. 

பாமாவிஜயம் படத்தின் வெற்றி உடனடியாக ரத்னாவளி, நல்லதங்காள், டம்பாச்சாரி ஆகிய மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை பி.எஸ்.ரத்னா பாய் சகோதரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. 

வடமொழியில் ஹர்ஷரால் என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ரத்னாவளி. இதனைத் தமிழில் நாடகமாக எழுதியிருந்தார் பம்மல் சம்பந்த
முதலியார். அது நாடகமாக நடத்தப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றதால் அதனைப் படமாக்க விரும்பினார். ஏவி.மெய்யப்பச் செட்டியார். ஏற்கெனவே அவர் கிராமபோன் இசைத்தட்டுக்களுக்காக ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். அதனை அடுத்து அவர் ‘சரஸ்வதி டாக்கீஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் எடுக்கப்பட்ட படம் தான் ‘ரத்னாவளி.’

கௌசாம்பி நாட்டு மன்னனுக்கும், இலங்கையின் இளவரசி ரத்னாவளிக்கும் ஏற்பட்ட காதல்... ஒரே அரசனை ஒன்று விட்ட சகோதரிகளான இருவர் மணப்பது போல திரைக்கதை. இதில் கௌசாம்பி நாட்டு மன்னனாக எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிக்க, சரஸ்வதி பாய் வாஸவதத்தை ஆகவும், ரத்னா பாய் ரத்னாவளி ஆகவும் நடித்தனர். இந்தப் படத்தில் கதாநாயகியின் தோழி காஞ்சனமாலையாக அறிமுகமானவர்தான் டி.ஏ.மதுரம். முக்கிய வேடங்களில் சி.பஞ்சு, ஏ.டி.கிருஷ்ண சர்மா, எம்.ஆர். சுப்பிரமணிய முதலியார் உள்பட பலர் நடித்திருந்தனர். 

‘தென்னாட்டுச் சார்லி சாப்ளின்’ என்று போற்றப்பட்ட சி.எஸ். சாமண்ணா இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்தார். உடன்
சுப்ரமணிய முதலியார், அங்கமுத்து, பபூன் ஷண்முகம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். பிரஃபுல்லா கோஸ் இயக்கியிருந்தார். 

கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், அந்த காலத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக பரவலான வரவேற்பை ரசிகளிடம் பெற்றிருக்கிறது. 

மீண்டும் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிக்கும் நல்ல தங்காள் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தார்கள் ரத்னா பாய் சகோதரிகள். பயோனீர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.பத்மனாபன் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் எம்.எஸ்.முருகேசன் நடித்திருந்தார். 

அதன் பிறகு டம்பாச்சாரி படத்தில் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். திருவெற்றியூர் காசிவிஸ்வநாத முதலியார், தனது சொந்த நாடகக் குழுவுக்காக எழுதிய டும்பச்சாரி விலாசம் என்கிற சமூக நோக்கம் கொண்ட நாடகத்தை அடிப்படையாக கொண்டு டும்பச்சாரி படத்தை இயக்கினார், மாணிக்லால் டாண்டன். இந்த படத்தில் குணசுந்தரியாக நாயகி ரத்தினபாயும், தாசி மதன சுந்தரி ஆக வில்லி பாத்திரத்தில் சரஸ்வதி பாயும் நடித்தனர். கணவராக எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நடித்தார். 

இந்தப் படத்திற்கு உத்தம மனைவி என்றும் பெயர் வைத்து கல்கத்தாவில் உள்ள பயனியர் பிலிம் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது.  புகழ்பெற்ற கோயம்புத்தூர் யூனிட் செல்லம் டாக்கீஸ் மருதாச்சலம் செட்டியார்  உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் 35 பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் சில அசல் நாடகத்திலிருந்து வந்தவை, மீதமுள்ளவை அந்தக் காலத்தின் பிரபலமான ஹிந்தி திரைப்பட ட்யூன்களின் தழுவல். ஆனால், பாடல்கள் எதுவும் பிரபலமாகவில்லை. இந்தப் படத்தின் விளம்பரத்தில் தென்னிந்திய நாடக சங்கீத ரமணி, ஆர்மோனிய சக்கரவர்த்தினி, கோகிலா கான ரத்னா பாய் சங்கீத பாங்கிருத தென்னிந்திய ஹோகர், தென்னாட்டு வீரகேசரி மிஸ் பி.எஸ்.சரஸ்வதி பாய் என்றும் இவர்களுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 

அதன் பிறகு அவர்கள் இருவரும் நடித்த படம் ராஜ பக்தி. 1937 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை சுந்தராவ் நட்கர்ணி இயக்க டி.என்.பட்டாபிராமன், எம்.டி.பார்த்தசாரதி உட்பட பலர் நடிக்க பி. எஸ். ரத்னா பாய், பி. எஸ். சரஸ்வதி பாய், ஆர். பி. லட்சுமி தேவி முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். செல்லம் டாக்கீஸ் மருதாச்சலம் செட்டியார் இந்த படத்தை தயாரித்தார். அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு வெளியான சைரந்திரி கீசகதவதம் என்கிற படத்தில் கதாநாயகிகளாக நடித்தனர். தனலஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரித்த அந்தப் படத்தை கஞ்சிபாய் ரத்தோடு இயக்கினார். கதாநாயகனாக பி.பி.ரங்காசாரி நடித்தார். 

அவர்கள் இருவரும் நடித்த கடைசி படமாக அல்லி விஜயம் படம் பதிவாகியுள்ளது. சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஹர்சாதிரி மேத்தா இயக்கத்தில் காளி என்.ரத்தினம் நாயகனாக நடித்த அந்தப் படத்தில் நடித்தனர். இவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் சேர்ந்தே நடித்து வந்தனர். பல படங்களில் அக்காள் நாயகியாகவும் தங்கை வில்லியாகவும் தொடர்ந்து நடித்து வந்துள்ளனர். 

சகோதரிகள் இருவரும் ஒன்றாக பிறந்தது போல் ஒன்றாகவே திரையில் தோன்றியவர்கள். பாமா விஜயம் படத்தில் தொடங்கி, அல்லி விஜயம் வரை பத்து பேசும் படங்களில் நடித்துள்ள இவர்கள் வெறும் நடிப்பு, நடனம், பாடல், இசை என்றில்லாமல் சண்டை பயிற்சியிலும் வில், வால் குதிரையற்றம் என அனைத்திலும் தங்களது திறமையை நிரூபித்தவர்கள். 

ஸ்ரீமதி ரத்னா பாய், ஸ்ரீமதி சரஸ்வதி பாய் சகோதரிகள் குதிரை மீதேறி விக்ராந்தன் கோதண்டனுடன் யுத்தம் செய்வது பார்க்கத் தக்கது என ஒரு படத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதிலிருந்து அந்த திறமைகளை அறியமுடிகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக